சென்னை,
புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் முக்கிய 137 மருந்துகளின் விலை 70 சதவீதம் வரை குறைகிறது. இதற்கான புதிய விலைப்பட்டியல் வருகிற நவம்பர் மாதம் 9-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பொதுவாக மருந்து தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து மொத்த வியாபாரிகளும், சில்லறை விற்பனையாளர்களும் மருந்துகளை வாங்கி, பின்னர் அதனை நோயாளிகளுக்கு விற்பனை செய்கின்றனர். இவ்வாறு விற்பனை செய்யும்போது, கூடுதல் விலையை நிர்ணயம் செய்து, அதிக லாபம் வைத்து விற்று வந்தனர். சில மருந்துகளுக்கு இந்த வர்த்தக லாபம் மிக மிக அதிகமாகவும், சாமானிய மக்கள் வாங்க முடியாத அளவிலும் இருந்து வந்தது.
இதனை முற்றிலுமாக கட்டுப்படுத்தவும், ஏழை-எளிய புற்றுநோய் நோயாளிகளுக்கு குறைந்த விலையில் சிகிச்சை கிடைக்கவும் மத்திய அரசு தற்போது நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. இதன்படி, புற்றுநோய்க்கான 137 மருந்துகள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றின் வர்த்தக லாபத்திற்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில், இந்த 137 மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையில் , 30 சதவீதம் வரை மட்டுமே வர்த்தகர்கள் தங்களது லாபமாக வைத்துக் கொள்ள முடியும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக, குறிப்பிட்ட சில முக்கிய் புற்றுநோய் மருந்துகளின் விலை 70 சதவீதம் வரை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
உதாரணமாக, இதுவரை சந்தையில் ரூ.1,000-க்கு விற்கப்பட்டு வந்த ஒரு குறிப்பிட்ட புற்றுநோய் மருந்தின் விலை, இந்த புதிய உத்தரவின் மூலம் 70 சதவீதம் குறைந்தால், அதனை நோயாளிகள் இனி வெறும் ரூ.300-க்கே சுலபமாக வாங்கிவிட முடியும்.
ஏற்கெனவே கடந்த 2019-ம் ஆண்டிலும், புற்றுநோய்க்கான 42 மருந்துகளின் விற்பனை லாபத்திற்கு மத்திய அரசு இதேபோன்று கட்டுப்பாடு விதித்திருந்தது. அதன் பலனாக, அந்த மருந்துகளின் கீழ் வரும் 526 பிராண்டுகளின் விலை 90 சதவீதம் வரை குறைந்து, ஏழை மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்தது குறிப்பிடத்தக்கது.
வருகிற நவம்பர் 9-ந் தேதி முதல், நாடு முழுவதும் உள்ள அனைத்து மருந்துக் கடைகளும், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளும் இந்த குறைக்கப்பட்ட புதிய விலையில் தான் புற்றுநோய் மருந்துகளை விற்க வேண்டும்.
மேலும், பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் எளிதில் பார்த்துத் தெரிந்து கொள்ளும் வகையில், புதிய விலைப்பட்டியலை மருந்துக் கடைகளின் முன்பும், மருத்துவமனைகளின் வரவேற்பறைகளிலும் கட்டாயம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். இதுமட்டுமின்றி, மருத்துவமனைகள் தங்களது அதிகாரப்பூர்வ இணையதளங்களிலும் இந்த புதிய விலை விவரங்களை வெளியிட வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.