செங்கல்பட்டு,
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரெயில் சேவையில் பிப்ரவரி 20 முதல் ஏப்ரல் 5 வரை மாற்றங்கள் செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இதன் காரணமாக ரெயில்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு வழித்தடத்தில் 208 மின்சார ரெயில் சேவைகள் இயங்கி வந்தன. இது தற்போது 164 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், அலுவலக நேரங்களில் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை மின்சார ரெயில்கள் இயக்கப்படும் எனவும், அதற்கேற்றவாறு பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு வர வேண்டும் என தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது. ஆனால் ரெயில்கள் சுமார் 20 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் வரை காலதாமதமாக இயக்கப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும் பராமரிப்பு பணிகள் நடைபெறும் இடங்களில் குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படுவதால் மிகவும் காலதாமதமாக அலுலகத்திற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த 3 நாட்களாக ரெயில் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இதற்கிடையில், பயணிகளின் வசதிக்காக மாநகர போக்குவரத்து கழகத்தினர் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என தெற்கு ரெயில்வே தரப்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரை ரெயில் நிலையம், கிண்டி, தாம்பரம் வழியாக 76 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதே போல் கிண்டி, தாம்பரம் வழியாக 43 பேருந்துகள், தாம்பரம், கூடுவாஞ்சேரி வழியாக 64 பேருந்துகள், சென்னை கடற்கரை, பூங்கா ரெயில் நிலையம், எழும்பூர் ரெயில் நிலையம் வழியாக 121 பேருந்துகள், நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் வழியாக 55 பேருந்துகள், பரங்கிமலை ரெயில் நிலையம் வழியாக 20 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி சென்னையில் இன்று பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் மின்சார ரெயில்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதன் காரணமாக தாம்பரம் உள்ளிட்ட சென்னையின் புறநகர் பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
குறிப்பாக தாம்பரம் பேருந்து நிலையம், சானடோரியம், பெங்களத்தூர் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் அதிக அளவிலான பயணிகள் கூட்டம் காணப்படுகிறது. பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட்டாலும், அனைத்து பேருந்துகளிலும் கூட்டம் நிரம்பி வழியும் சூழல் உள்ளது. நாளை திங்கள்கிழமை அலுவலக தினத்தில் இன்னும் அதிகமாக கூட்டம் வரும் என்பதால், மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.