தமிழக செய்திகள்

மறுசீரமைப்பு பணி: எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை 1 முதல் 5 வரை மூடல்

மின்சார ரெயில்கள் வழக்கம்போல நடைமேடை 10, 11-ல் இருந்து இயக்கப்படும்.

சென்னை,

வருகை மற்றும் பார்சல் பிரிவுக்கான நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை 1 முதல் 5 வரை மூடப்பட்டது.

மறுசீரமைப்பு பணி

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.842 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மறுசீரமைப்பு பணியானது புதிய வருகை மற்றும் புறப்பாடு முனையங்கள், மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள், மேம்படுத்தப்பட்ட நிலைய உள்கட்டமைப்பு மற்றும் பிற அதிநவீன வசதிகளை அமைப்பதை உள்ளடக்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக தற்போது வருகை மற்றும் பார்சல் பிரிவுக்கான நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முதல் கட்டமாக நடைமேடை 1 முதல் 5 வரையில் 18 மீட்டர் அகலம், 120 மீட்டர் நீளத்துக்கு புதிய இரும்பு நடைமேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன்காரணமாக, எழும்பூரிலிருந்து புறப்பட்டு தென்மாவட்டங்களுக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சில தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

தண்டவாளங்கள் மூடல்

நேற்று முதல் நடைமேடை 1 முதல் 5 வரையில் மூடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, நடைமேடை 4-ல் பள்ளம் தோண்டப்பட்டு பில்லர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து, ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, “மறுசீர மைப்பு பணி காரணமாக தற்போது நடைமேடை 1 முதல் 5-வரை உள்ள தண்டவாளங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. எனவே, எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 6 முதல் 9 வரை உள்ள நடைமேடைகளில் இருந்து இயக்கப்படும். மின்சார ரெயில்கள் வழக்கம்போல நடைமேடை 10, 11-ல் இருந்து இயக்கப்படும்.

தற்போது நடைபெறும் முதல் கட்ட பணிகள் முடிவடைந்ததும், 2-ம் கட்டமாக நடைமேடைகள் 6 முதல் 8 வரையிலான பகுதிகளில் நடைமேம்பாலத்துக்கான தூண்கள் மற்றும் தாங்கு சட்டங்களை அமைப்பதற்கான பணிகள் நடை பெற இருக்கிறது. அப்போது அதற்கேற்ப ரெயில் சேவையில் மாற்றம் செய்யப் படும். 3-ம் கட்டமாக நடைமேடைகள் 9 முதல் 11 வரையில் நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த நேரத்தில் இரவு நேர மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படும்” என்றார்.