தமிழக செய்திகள்

புதிய ரெயில் சேவைகள் வேண்டி கோரிக்கை: ரெயில்வே மந்திரியை சந்தித்த துரை வைகோ எம்.பி

திருப்பதி - குண்டூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை திருச்சி வரை நீட்டித்து அறிவித்ததற்கு ரெயிவே மந்திரிக்கு நன்றி தெரிவித்துள்ளார் எம்.பி துரை வைகோ

சென்னை,

மதிமுக எம்.பி. துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திருச்சி - திருப்பதி இடையிலான பகல் நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சேவைக்கான எனது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி, திருப்பதி – குண்டூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை திருச்சி வரை நீட்டித்து அறிவித்ததற்கும் மற்றும் திருச்சி – சார்லப்பள்ளி (Hyderabad) இடையிலான சிறப்பு ரெயில் சேவையை நிரந்தர சேவையாக மாற்றியதற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டேன்.

ரெயில்வே மேம்பாலம்

எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகவும், கீரனூர் - திருவெறும்பூர் இடையே முக்கிய இணைப்புப் பாதையாகவும், சுமார் 45 கிராமங்களுக்கான முக்கிய சந்திப்புப் பகுதியாகவும் விளங்கும் கீரனூர் LC No: 355இல் இரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, மீண்டும் நினைவூட்டி கடிதம் வழங்கினேன்.

ரெயில் நிலையங்களில் நிறுத்தம் வேண்டி கோரிக்கை:

1. திருச்சி - மயிலாடுதுறை MEMU விரைவு ரெயில் (16833/34) மற்றும் எர்ணாகுளம் - காரைக்கால் விரைவு ரெயில் (16187/88) ஆகியவற்றுக்கு திருவெறும்பூர் (TRB) ரெயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும்.

2. மைசூரு - கடலூர் துறைமுக விரைவு ரெயில் (16231/16232) பெட்டவாய்த்தலை ரெயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என்றும் உரிய காரணங்களுடன் கோரிக்கை வைத்தேன்.

3. போட் மெயில் எக்ஸ்பிரஸ் (16751/16752) ரெயிலுக்கு கீரனூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தம் வழங்கிட வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தேன்.

புதிய ரெயில் சேவைகள் வேண்டி கோரிக்கை:

1. திருச்சியிலிருந்து கர்நாடக மாநிலம் சாமராஜநகர் வரை இரவு நேர விரைவு ரெயில் சேவை அறிமுகப்படுத்த வேண்டும்.

2. திருச்சி – புதுக்கோட்டை – காரைக்குடி – அருப்புக்கோட்டை வழியாக திருச்செந்தூர் வரை தினசரி பகல் நேர இன்டர்சிட்டி விரைவு ரெயில் சேவை அறிமுகப்படுத்த வேண்டும்.

3. தற்போது ஒற்றை மின்சாரப் பாதையாக இயங்கும் திருச்சி – கரூர் ரெயில் பாதையை இரட்டைப் பாதையாக மாற்றும் திட்டத்திற்கு விரைவான அனுமதி வழங்கி, பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து கடிதம் கொடுத்தேன்.

விஷன் 2030 திட்டத்தில் திருச்சியைச் சேர்க்கும் கோரிக்கை:

2030-க்குள் 48 முக்கிய நகரங்களில் ரெயில் புறப்படும் திறனை இரட்டிப்பாக்கும் விஷன் 2030 திட்டத்தில் திருச்சியைச் சேர்க்க வேண்டும் என்று அதன் முக்கியத்துவத்தை விளக்கி கோரிக்கை வைத்தேன்.

எனது நன்றியை அன்புடன் ஏற்றுக்கொண்ட மந்திரி, எனது அனைத்து கோரிக்கைகள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்து, வழங்கிய கோரிக்கைக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டு, அவை அனைத்தையும் உரிய முறையில் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.