சென்னை,
பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழகத்தில் 3.5%-ஆக உள்ள இஸ்லாமிய மக்களுக்கான இட ஒதுக்கீட்டை 5%-ஆக உயர்த்த வேண்டும் என சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் நேற்று பேட்டியளித்திருக்கிறார்.
அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 15(4), 15(5) ஆகியவற்றின் படி சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க முடியுமே தவிர மதத்தின் அடிப்படையில் யாருக்கும் தனி இடஒதுக்கீடு வழங்க இயலாது. இந்நிலையில், ஏற்கனவே தமிழகத்தில் இருக்கும் இஸ்லாமிய மக்களுக்கான இட ஒதுக்கீட்டை மேலும் விரிவுபடுத்துவது முறையானதல்ல. குறிப்பாக, இதனால் அதிகம் பாதிக்கப்படப் போவது பிற்படுத்தப்பட்ட இந்து மக்களே!
எனவே, தன்னை "அனைவருக்குமான அரசு" என்று முன்னிலைப்படுத்திக் கொள்ளும் தவெக அரசு, சமூகநீதியை கூறுபோடும் வகையிலும், பிற்படுத்தப்பட்ட இந்து மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்கும் வகையிலும் எழுந்துள்ள இக்கோரிக்கையை முழுமையாக நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.