சென்னை,
தமிழ்நாடு சட்டமன்றத்தில் மேகதாது அணைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா பாசனத்தின் உயிர்நாடியாக அமைந்துள்ள காவிரி நீர் உரிமையை பாதுகாக்க, மேகதாது அணை கட்டும் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என இன்று (19.07.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் முதல்-அமைச்சர் அவையில் விரிவான தீர்மானத்தை அறிமுகம் செய்து முன்மொழிந்தார். இதன் மீது அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்து தீர்மானத்திற்கு வலுச்சேர்த்துள்ளனர்.
எதிர்கட்சித் தலைவர் முன்மொழிந்த திருத்தத்தையும் அரசின் தீர்மானத்தின் நான்காவது பத்தியில் இணைத்து கொள்ளப்படும் என முதல்-அமைச்சர் ஒப்புதல் அளித்து, அத்திருத்தமும் உள்ளடங்கிய தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
கட்சிக் கொள்கை நிலைகளில் வேறுபாடுகள் இருப்பினும் தமிழ்நாட்டின் நலனையும், உரிமையினையும் பாதுகாக்க ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றுபட்டு நிற்கும் என்ற உணர்வை வெளிப்படுத்தும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசும், நீர்வளத்துறையும் கர்நாடக அரசுக்கு எவ்வித அனுமதியும் தரக் கூடாது.
தமிழ்நாட்டின் சட்டபூர்வ உரிமையை மதிக்கும் படி, கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட சட்டமன்றப் பேரவையின் தீர்மானத்தின் உணர்வுகளை மதித்து மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதுடன், பேரவையில் ஜனநாயக பூர்வ அணுகுமுறையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய அரசுக்கும், ஆதரித்து நின்ற அரசியல் கட்சிகளுக்கும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு நன்றி பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.