தமிழக செய்திகள்

தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளங்களை புனரமைக்கும் பணிகள் நாளை தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டத்துக்கு ரூ.32.69 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் சுமார் 22,051 சிறுபாசன ஏரிகள் மற்றும் 69,777 குளங்கள் மற்றும் ஊரணிகள் உள்ளன. சிறுபாசன ஏரிகள் ஊராட்சி ஒன்றியங்களின் உரிமையிலும் பராமரிப்பிலும் உள்ளன. குளங்கள், ஊரணிகள் கிராம ஊராட்சிகளால் பராமரிக்கப்படுகின்றன.

இந்நீர்நிலைகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், மாநில நிதியில் செயல்படுத்தப்படும் சிறுபாசன ஏரிகள் புனரமைப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்களின் மூலம் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மத்திய அரசின் VB - G RAMG திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வரத்துக் கால்வாய்கள், ஏரிகள், குளங்கள் மற்றும் கால்வாய்களை புனரமைக்கும் பணிகள் நாளை (திங்கட்கிழமை) தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, 10,185 கால்வாய்கள், 809 ஏரிகள், குளங்கள் மற்றும் ஊரணிகளை புனரமைக்கும் பணிகள் நாளை தொடங்குகின்றன. இதற்காக சென்னையை தவிர்த்து மற்ற 37 மாவட்டங்களுக்கு ரூ. 507.92 கோடி நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டத்துக்கு ரூ.116.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்துக்கு ரூ.32.69 கோடி, விழுப்புரம் மாவட்டத்துக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.