சென்னை,
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 06.10.2026 அன்று நடக்கிறது. அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இந்த இடைத்தேர்தலின்போது, வாக்குப்பதிவுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடுவதற்கும், பரப்புவதற்கும் இந்திய தேர்தல் கமிஷன் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பொதுத்தேர்தல் அல்லது இடைத்தேர்தல்களின் போது, வாக்குப்பதிவு தொடங்கும் நேரம் முதல் வாக்குப்பதிவு முடிவடைந்து அரை மணி நேரம் வரை இந்த தடை அமலில் இருக்கும்.
அதன்படி, வாக்குப்பதிவு நாளான 6.10.2026 காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரை, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை (எக்சிட் போல்) நடத்துவது மற்றும் அதை அச்சு அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது தடை செய்யப்படுகிறது
வாக்குப்பதிவு முடிவடைவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்துடன் முடிவடைகிற 48 மணி நேர கால அளவில், (அதாவது, அக்டோபர் 6-ந் தேதி மாலை 6 மணிக்கு, 48 மணிநேரத்திற்கு முன்பு) எந்தவொரு கருத்துக்கணிப்பு அல்லது பிற வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகள் உள்பட தேர்தல் விவகாரங்களை மின்னணு ஊடகங்களில் காட்சிப்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.