திருச்சி,
ஓய்வு பெற்ற பெல் ஊழியரிடம் சி.பி.ஐ. அதிகாரி போல் பேசி ரூ.94 லட்சம் மோசடி செய்த நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி ரங்கன். இவர் ஓய்வு பெற்ற பெல் ஊழியர் ஆவார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த அக்டோபர் மாதம் 7-ந் தேதி அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் கஸ்தூரி ரங்கனிடம், தான் பெங்களூரு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருவதாக கூறினார்.
அப்போது அவர் சதகாத்கான் என்பவர் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், மும்பையில் உள்ள ஒரு வங்கியில் அவர் போலியான வங்கி கணக்கு வைத்திருந்தது கண்டறியப்பட்டுள்ள தாகவும் கூறினார். போலியாக தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்து உங்களது வங்கி கணக்கிற்கு அதிகளவில் பணம் அனுப்பப்பட்டு உள்ளது. எனவே நீங்களும் கைது செய்யப்படலாம் என்று தெரிவித்தார்.
இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கஸ்தூரி ரங்கன் நான் இப்போது என்ன செய்தால் கைது செய்வதை தவிர்க்கலாம் என்று கேட்டுள்ளார். இந்த வழக்கில் இருந்து நீங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றால் நாங்கள் சொல்லும் வங்கி கணக்கில் பணம் செலுத்துமாறு கூறினார். இதை அடுத்து கஸ்தூரி ரங்கன் ரூ.93 லட்சத்து 95 ஆயிரத்தை அவர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் அழைப்பை துண்டித்துள்ளனர்.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கஸ்தூரி ரங்கன் இதுகுறித்து திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.