தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்தின் தலைவராக மணிப் பூர் ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், உறுப்பினராக சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி ஆர்எம்டி. டீக்காராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு சட்டத்துறை செயலாளர் பி.சுமதி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சட்ட ஆணையம் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒருமுறை அமைக்கப்படும். ஏற்கனவே அமைக்கப்பட்ட ஆணையம் கடந்த ஜூன் 18-ந்தேதியுடன் முடிவுக்கு வந்து விட்டது. அதனால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு புதிய சட்ட ஆணையம் அமைக்கப்படுகிறது. இந்த மாநில சட்ட ஆணையத்தின் தலைவராக, மணிப்பூர் ஐகோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் நியமிக்கப்படுகி றார். அதேபோல இந்த ஆணையத்தின் முழு நேர உறுப்பினராக சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி ஆர்எம்டி. டீக்காராமன், முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் டி.கே.ராமச்சந்திரன், முன்னாள் செயலாளர் ஏ.அருணகிரி. பகுதி நேர உறுப்பினர்களாக முன்னாள் மாவட்ட நீதிபதிகள் பி.மோகன்தாஸ், ஆர்.கோவிந்தராஜன் ஆகியோர் நியமிக்கப் படுகின்றனர். இந்த ஆணையத்தின் உறுப்பினர் செயலராக சட்டத்துறை செயலாளர் செயல்படுவார்.
இந்த சட்ட ஆணையம், ஏற்கனவே உள்ள சட்டங்களை மாற்றி அமைக்கவும், அதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யவும் பரிந்துரைகளை வழங்கும். அதுபோல சமூக, பொருளாதார ரீதியான சட்டங்களை கொண்டு வரவும், நீதி நிர்வாகம் செயல்பாடுகளை விரைவுபடுத்தவும். சீர்த்திருத்தங்களை கொண்டு வரவும், மத்திய, மாநில அரசுகளுடன் உறவுகளை மேம்படுத்துவது, மாநில அரசின் சட்டம் மட்டுமல்லாமல், மத்திய அரசின் சட்டத்திலும் திருத்தம் கொண்டு வருவது போன்ற நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை செய்யும். தலைவர். உறுப்பினர்களின் பதவிக்காலம் என்பது அவர்கள் பதவியேற்ற நாளில் இருந்து 3 ஆண்டுகள் ஆகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.