சென்னை,
ஈரானில் இருந்து 312 இந்திய மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இன்று விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்த தமிழக மீனவர்களை மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மந்திரியும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயல் வரவேற்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
ஈரானில் இருந்து 312 இந்திய மீனவர்கள் தங்களது தாயகத்திற்குத் திரும்பியதைக் கொண்டாடும் இத்தருணம், மட்டற்ற மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளிக்கிறது.
முதலிலிருந்தே, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான உறுதியான மத்திய அரசு, மீனவர்களின் பாதுகாப்பான வருகையை உறுதி செய்வதற்காக அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு, தொடர்ச்சியான நயமிக்கப் பேச்சுவார்த்தைகளையும் அதிகாரிகளுடனான நெருக்கமான ஒருங்கிணைப்பையும் மேற்கொண்டது.
உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் பாதுகாப்பும் கண்ணியமும் எப்பொழுதுமே எங்களது முன்னுரிமையாகும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.