சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சியில் 2026-27 நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் சொத்துவரி ரூ.1,124.69 கோடியும், தொழில் வரி ரூ.312.06 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் வரிவசூல் விகிதம் முறையே 12.95 சதவீதம் மற்றும் 6.89 சதவீதம் அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
பெருநகர சென்னை மாநகராட்சியின் பிரதான வருவாய் இனங்களில் சொத்துவரி மற்றும் தொழில்வரி உள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் 2026-27 நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் (1/2026-27) சொத்துவரியாக ரூ.1,124.69 கோடியும், தொழில் வரியாக ரூ.312.06 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது. சொத்துவரியினை 9.20 லட்சம் சொத்து உரிமையாளர்களும், தொழில்வரியினை 45 ஆயிரம் வணிகர் மற்றும் தனிநபர்களும் முழுமையாக செலுத்தியுள்ளனர்.
மேற்படி முதலாம் அரையாண்டில் வசூலிக்கப்பட்ட சொத்துவரி மற்றும் தொழில்வரி தொகையானது கடந்த ஆண்டின் வரிவசூலினை காட்டிலும் வளர்ச்சி விகிதம் முறையே 12.95 சதவீதம் மற்றும் 6.89 சதவீதம் அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இது மாநகராட்சியின் சாதனையாக கருதப்படுகிறது.
முதலாம் அரையாண்டின் இறுதி நாளான 30.09.2026 அன்று மட்டுமே சொத்து வரி வசூல் ரூ.50.26 கோடி மற்றும் தொழில்வரி வசூல் ரூ.45.94 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட வளர்ச்சியானது முறையான அலுவலர்களின் கண்காணிப்பு, களஆய்வில் நுண்ணிய மதிப்பாய்வு மற்றும் அலுவலர்களுக்கு உரிய திட்டங்கள் வகுத்து பகிர்ந்தளித்ததன் மூலமாகவும், கடந்த ஜுலை மாதம் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர வசூல் மூலமாகவும், நிர்ணயிக்கப்பட்ட இலக்கானது, பெருநகர சென்னை மாநகராட்சியால் வசூலிக்கப்பட்டுள்ளது.
சொத்துவரி மற்றும் தொழில் வரியினை உரிய காலத்தில் செலுத்தி, பெருநகர சென்னை மாநகராட்சி கட்டமைப்பு பணிகளுக்கு உதவிய பொதுமக்களுக்கு பெருநகர சென்னை மாநகரட்சியின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட தகவலை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.