தமிழக செய்திகள்

சொத்துவரி பெயர் மாற்றத்திற்கு ரூ.3,000 லஞ்சம் வாங்கிய ஆர்.ஐ. கைது

இந்த சம்பவம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர் விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர்,

சொத்துவரி பெயர் மாற்றத்திற்கு ரூ.3,000 லஞ்சம் வாங்கிய ஆர்.ஐ. கைது செய்யப்பட்டுள்ளார்.

பெயர் மாற்றம்

விருதுநகர் ஆவலப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ். இவர் அதே பகுதியில் வீடோடு கூடிய இடத்தை வாங்கினார். சொத்து வரி ரசீதில் பெயர் மாற்றம் செய்வதற்காக, நகராட்சி வருவாய் ஆய்வாளர் ஹென்றி டேவிட்டை அணுகியபோது, அவர் ரூ.4,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

ரசாயனம் தடவிய பணம்

இதனையடுத்து ரூ.3,000 கொடுக்க ஒத்துக் கொண்ட மைக்கேல் ராஜ், இது குறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவப்பட்ட ரூ.3,000 பணத்தை அவரிடம் கொடுத்து அனுப்பினர்.

நகராட்சி அலுவலகம் அருகே மைக்கேல்ராஜின் ஓட்டலுக்கு வந்த ஹென்றி டேவிட்டிடம், ரசாயனம் தடவிய பணம் கொடுத்த போது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கைது செய்தனர்.

தொடர் விசாரணை

அவரை நகராட்சி வருவாய் பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து சென்று இன்ஸ்பெக்டர் பூமிநாதன் உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர் விசாரணை செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT