தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் குறுவை சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க இயலாத நிலை உள்ளது. இதனால் இந்த ஆண்டு ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறப்பது குறித்து அரசும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் கோடை நெல் சாகுபடி எனப்படும் முன்பட்ட குறுவை சாகுபடி பம்புசெட் மோட் டார் மூலம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். தற்போது பயிர்கள் நன்றாக வளர்ந்து வரும் நிலையில் உள்ளது.
விவசாயிகள் ஆழ்துளை கிணறுகள் மற்றும் மின் மோட்டார்களை நம்பியே நெல் சாகுபடி செய்து வரும் நிலையில் கடந்த சில வாரங்களாக போதிய நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படாததால் மோட்டார்களை இயக்க முடியாமல் தண்ணீர் பாய்ச்சுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் டீசல் என்ஜின் மோட்டார் மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வருகிறார்கள்.
மும்முனை மின்சாரம் இல்லாததால் தஞ்சையை அடுத்த விழுதியூர், இரும்புத்தலை, மணக்குடி, முனியூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாசனத்துக்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் வயல்கள் வறண்டு பாளம், பாளமாக வெடித்துள்ளன.
இதன் காரணமாக வளர்ச்சி அடைய வேண்டிய நெற்பயிர்கள் தண்ணீர் பற்றாக்குறையால் வாடத் தொடங்கியுள்ளன. பயிரிடுவதற்காக கடன் வாங்கி விதை, உரம் மற்றும் தொழிலாளர் செலவுகளை மேற்கொண்ட விவசாயிகள் தற்போது பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.