தமிழக செய்திகள்

அரிசி விலை ஜனவரியில் குறைய வாய்ப்பு - வியாபாரிகள் தகவல்

நெல் வரத்து சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் வருகிற ஜனவரி மாதம் முதல் அரிசி விலை குறைய வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் அரிசி விலையால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், தற்போது நெல் வரத்து சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், வருகிற ஜனவரி மாதம் முதல் அரிசி விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மூட்டைக்கு ரூ.800 வரை விலை உயர்வு

தமிழகத்தில் வெளிச்சந்தையில் சன்ன ரக அரிசி மூட்டைக்கு ரூ.800 வரையிலும், மோட்டா ரக அரிசி மூட்டைக்கு ரூ.600 வரையிலும் விலை அதிகரித்துள்ளது. இதனால் நடுத்தர வருவாய் கொண்ட குடும்பங்களின் மாதாந்திர செலவுகள் வெகுவாக உயர்ந்துள்ளன.

கடந்த ஜூலை மாதம் ரூ.1,600-க்கு விற்பனை செய்யப்பட்ட 26 கிலோ கொண்ட சன்ன ரக அரிசி மூட்டை, ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1,750 ஆகவும், செப்டம்பர் மாதத்தில் ரூ.1,900 ஆகவும் உயர்ந்தது. அக்டோபர் மாதத்தில் மேலும் அதிகரித்து ரூ.2,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல், 26 கிலோ கொண்ட மோட்டா ரக அரிசி மூட்டையின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில் ரூ.1,200 ஆக இருந்த இதன் விலை, ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1,400 ஆகவும், செப்டம்பரில் ரூ.1,600 ஆகவும் அதிகரித்தது. தற்போது ரூ.1,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நெல் வரத்து குறைந்ததால் விலை உயர்வு

அரிசி விலை உயர்வுக்கான காரணம் குறித்து நெல் அரிசி வியாபாரிகள் சங்கத் தலைவர் கோபி கூறியதாவது:-

“அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு தினமும் சுமார் 100 லாரிகளில் நெல் மூட்டைகள் வந்துகொண்டிருந்தன. ஆனால், போதிய விளைச்சல் இல்லாத காரணத்தால் நெல் வரத்து திடீரென பாதியாகக் குறைந்தது. இதன் காரணமாகவே அரிசி விலை உயர்ந்தது.

தற்போது நெல் வரத்து மீண்டும் சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் வருகிற ஜனவரி மாதம் முதல் அரிசி விலை குறைய வாய்ப்புள்ளது.”

இவ்வாறு அவர் கூறினார்.

விற்பனை சரிவு; 10 கிலோவாக குறைந்த கொள்முதல்

அரிசி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், கடைகளில் அரிசி விற்பனை பெருமளவில் சரிந்துள்ளது. விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் தங்களது தேவைக்கு ரேஷன் அரிசியை அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து அரிசி வியாபாரி ஆனந்தராஜ் கூறுகையில், முன்பு ஒரு குடும்பத்தினர் 26 கிலோ அரிசி மூட்டையாக வாங்கிச் சென்றனர். ஆனால், தற்போது விலை உயர்வு காரணமாக 10 கிலோ என்ற அளவிலேயே அரிசி வாங்கிச் செல்கின்றனர் என்றார். நெல் வரத்து அதிகரித்து வருவதால் ஜனவரி மாதத்தில் அரிசி விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT