தமிழக செய்திகள்

விளைச்சல் பாதிப்பால் தமிழகத்தில் அதிகரிக்கும் அரிசி விலை: எப்போது குறையும்.?

விளைச்சல் பாதிப்பால் தமிழகத்தில் அரிசி விலை 10 முதல் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி பாதிப்பு, கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் நெல் விளைச்சல் பாதிப்பு காரணமாக தமிழ்நாட்டில் அரிசி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அரிசி விலை உயர்வு குறித்து கோயம்பேட்டைச் சேர்ந்த அரிசி மொத்த வியாபாரிகள் கூறியதாவது:-

தமிழகத்துக்கு நமது தஞ்சை பகுதி மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் அரிசி விற்பனைக்கு வரும். பொதுவாக தமிழகத்தில் தஞ்சையில் விளையும் மோட்டா ரக அரிசியை விட கர்நாடகாவில் இருந்து விற்பனைக்கு வரும் பொன்னி சன்னரக அரிசி தான் அதிகளவில் விற்பனையாகிறது.

அதேபோன்று, சென்னையை அடுத்த ரெட்ஹில்ஸ் பகுதியை சுற்றி இருக்கும் அரிசி ஆலைகளுக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து அதிக அளவில் நெல் அரவைக்கு வரும். ஆனால், தற்போது கர்நாடகாவில் நெல் விளைச்சல் குறைந்துள்ள காரணத்தால், அம்மாநில வியாபாரிகள் ஆந்திரா மற்றும் தஞ்சாவூர் சென்று அரிசியை வாங்கிச் செல்கின்றனர். இதனால், அரிசி விலை 10 முதல் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக பொன்னி சன்னரக அரிசி அதிகபட்சமாக 25 சதவீதமும், மோட்டா ரக அரிசி 10 சதவீதமும், பாசுமதி அரிசி 10 சதவீதமும் விலை அதிகரித்துள்ளது.

அதன்படி, ரூ.1,400-க்கு விற்பனை செய்யப்பட்ட 26 கிலோ பொன்னி சன்னரக அரிசி ரூ.1,700 ஆக அதிகரித்துள்ளது. ரூ.650-க்கு விற்பனை செய்யப்பட்ட 10 கிலோ பொன்னி சன்னரக அரிசி ரூ.800 ஆக விலை உயர்ந்துள்ளது. ரூ.350-க்கு விற்பனை செய்யப்பட்ட 5 கிலோ பொன்னி சன்னரக அரிசி ரூ.420 ஆகவும் அதிகரித்துள்ளது.

அதே போன்று கர்நாடகாவில் இருந்து விற்பனைக்கு வரும் ஸ்டீம் வகை (சிங்கிள் பாயில்) பொன்னி அரிசி 30 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது. அதன்படி, 26 கிலோ ராய்ச்சூர் பொன்னி அரிசி ரூ.1,250-ல் இருந்து ரூ.1,700 ஆக உயர்ந்துள்ளது. அதே போன்று, ரூ.2,200 முதல் ரூ.2,300 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த 30 கிலோ பாசுமதி அரிசி ரூ.2,800 முதல் ரூ.3,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. குறைந்தபட்சமாக ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ பாசுமதி அரிசி தற்போது ரூ.85 முதல் ரூ.90 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த அரிசி விலை உயர்வு டிசம்பர் மாதத்திற்கு பிறகு குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது.”

இவ்வாறு அவர்கள் கூறினர்.