கிருஷ்ணகிரி,
காவேரிப்பட்டணம் பகுதியில் ஆயுதபூஜையை முன்னிட்டு தினசரி 3 ஆயிரம் மூட்டை பொரி தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அரிசி பற்றாக்குறையால் பொரி விலை உயர வாய்ப்பு இருப்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் வருகிற 19-ந் தேதி ஆயுதபூஜை கொண்டாடப்பட உள்ளது. இதற்கான பூஜையில் பொரி முக்கிய இடம்பெறும். எனவே கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியில் இரவு, பகலாக பொரி தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கடந்த ஒரு வாரகாலமாக காவேரிப்பட்டணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்து வந்ததால், பொரி தயாரிப்பு பணிகள் வழக்கத்தை விட சற்று தாமதமாக தொடங்கியது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பொரி தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
தமிழகத்தில் சேலம், வேலூர், ஈரோடு, சென்னை, கோவை, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மொத்த விற்பனைக்காக பொரி கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து சில்லறை விற்பனையாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது 100 லிட்டர் அளவு கொண்ட ஒரு மூட்டை பொரி ரூ.380-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் ஒரு படி பொரி ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆயுத பூஜை நெருங்கும் நிலையில் பொரிக்கான தேவை மேலும் அதிகரிக்கும் என்பதால், அதன் விலை சற்று உயரக்கூடும் என உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து பொரி உற்பத்தியாளர்கள் சிலர் கூறியதாவது:-
பொரி தயாரிக்க தேவையான அரிசி வடமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. கடந்த காலங்களில் ஒரு கிலோ அரிசி ரூ.33-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது எல் நினோ தாக்கத்தால் அரிசி பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. எனவே பொரி தயாரிக்கும் அரிசி கிலோவுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.43 ஆக உயர்ந்து உள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்ந்த போதிலும், 6 கிலோ கொண்ட ஒரு மூட்டை பொரியின் விலை ரூ.380 என விலை நிர்ணயம் செய்து உள்ளோம்.
காவேரிப்பட்டணம் பகுதியில் தினசரி சுமார் 3 ஆயிரம் மூட்டை பொரி தயாரிக்கப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்ததால் தயாரிப்பு பணியை சற்று தாமதமாக தொடங்கினோம். தற்போது ஆயுதபூஜை நெருங்கி வருவதால் இரவு, பகல் பாராமல் முழு வீச்சில் பொரி தயாரித்து வருகிறோம். ஆயுதபூஜை நெருங்கும் போது பொரிக்கான தேவை அதிகரித்து, விலையில் சற்று உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.