தமிழக செய்திகள்

முதல்-அமைச்சரின் சிறப்பு அதிகாரியாக ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனம்

ஜோதிடராகவும், தவெகவின் செய்தி தொடர்பாளராகவும் உள்ளார் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றி வேல்.

சென்னை,

ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல், திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியில் பிறந்தவர். பள்ளி, கல்லூரி காலத்தில் கிரிக்கெட் வீரராக விளங்கியவர். 1989 வாக்கில் ஜெயலலிதாவுக்கு ஜோதிடம் கணித்துக் கூறினார். அதன்பிறகு, ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் ஆனார். பின்னர் 1996ல் ஜெயலலிதா தேர்தலில் தோல்வியடைவார் என்றும், சிறைக்குச் செல்ல நேரிடும் என்றும் கணித்துச் சொன்னவர் ரிக்கி ரத்தன் பண்டிட்.

ராதன் பண்டிட் கணித்த பெரும்பாலானவையும் அப்படியே நடந்ததால் தனிப்பட்ட ஜோதிடராக அவரிடம் ஆலோசனைகளை கேட்பதை வழக்கமாக்கிக் கொண்டார் ஜெயலலிதா. அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பின் போதும் தேர்தல் சமயங்களிலும், தன்னிடம் ஆலோசனை பெற்றே ஜெயலலிதா பல விஷயங்களில் செயல்பட்டதாக ராதன் பண்டிட் கூறியுள்ளார். ஜெயலலிதா தனக்கு எதிரான பல வழக்குகளில் தனது ஆலோசனையின்படியே செயல்பட்டதாக ராதன் பண்டிட் கூறியுள்ளார்.

இந்தநிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு, அவருக்கு மிகவும் நெருக்கமாகினார் பண்டிட் வெற்றிவேல். 2026ல் விஜய் முதல்-அமைச்சர் ஆவார் என சில யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுத்திருந்தார் பண்டிட் வெற்றிவேல். மேலும், விஜய்யின் பிரசார நிகழ்ச்சிகளுக்கு தேதியை குறித்துக் கொடுப்பது இவர்தான் என்றும் கூறப்படுகிறது.

அண்மையில், தமிழக வெற்றிக் கழகத்தில் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல், தவெக மாநில செய்தி தொடர்பாளராக நியமனம் செய்யப்பட்டார்.

இந்தநிலையில், முதல்-அமைச்சர் விஜய்யின் சிறப்பு அதிகாரியாக ( அரசியல்) ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் செய்து தமிழக அரசின் முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலுக்கு அரசு பதவி வழங்கப்பட்டுள்ளது. ஜோதிடராகவும், தவெகவின் செய்தி தொடர்பாளராகவும் உள்ளார் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றி வேல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.