தமிழக செய்திகள்

தமிழகத்தில் அதிகரிக்கும் காய்ச்சல்: சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

பருவமழை காலம் என்பதால் தமிழகத்தில் காய்ச்சல் அதிகரித்து வருகிறது.

சென்னை,

பருவமழை காலம் என்பதால் தமிழகத்தில் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக பொதுமக்களுக்கு தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது.

காய்ச்சல் - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

அதன்படி, குறையாத காய்ச்சல், வயிற்று வலி, திடீர் அதிக காய்ச்சல், கடுமையான தசைவலி, கண்கள் சிவத்தல், கடுமையான தலைவலி, கண்களுக்குப் பின்னால் வலி, மூட்டு வலி, தோலில் சிவப்பு தடிப்புகள், முதுகு வலி, உடல் சோர்வு, பசியின்மை உள்ளிட்ட அறிகுறிகள் தெரிந்தால் அருகில் உள்ள மருந்தகத்தில் மாத்திரை வாங்கி சாப்பிடாமல் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று டாக்டர்களை அணுகி பரிசோதனை செய்ய வேண்டுமென பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

பருவ மழை நோய் அதிகரிப்பை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான வார்டு அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காய்ச்சலுக்கு ஏற்ப தனித்தனி பரிசோதனை செய்து நோயின் தீவிரத்தை தீவிர காய்ச்சல், நடுத்தர காய்ச்சல், லேசான காய்ச்சல் என பகுப்பாய்வு செய்து அதற்கு ஏற்ப நோயாளிக்கு மருந்து கொடுக்க வேண்டும் என மருத்துவ அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மழைக்காலம் என்பதால் எலி காய்ச்சல், டெங்கு காய்ச்சல், சிக்கன் குனியா, டைபாய்டு உள்ளிட்ட பருவமழை நோய்கள் தமிழ்நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளதாகவும் வீட்டையும் சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் பொது சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மாவட்ட மருத்துவ அதிகாரிகள் மாவட்ட அளவிலான மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி உள்ளிட்ட நிர்வாக அமைப்போடு ஒருங்கிணைந்து நோய் பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிர படுத்தவும் அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.