தமிழக செய்திகள்

மூலப்பொருட்கள் விலை உயர்வு... கரூரில் 2 நாட்கள் அட்டைப் பெட்டி உற்பத்தி நிறுத்தம்!

காகிதத்தின் விலை கடந்த 2 மாதங்களில் மட்டும் டன்னுக்கு ரூ.1,000 வீதம் 8 முறை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

கரூர்,

மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், கரூரில் வரும் 9, 10-ந்தேதிகளில் அட்டைப் பெட்டி உற்பத்தியை நிறுத்த உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

அட்டைப்பெட்டி உற்பத்தி

கரூரில் அட்டைப் பெட்டி தயாரிக்கும் தொழில் முக்கிய தொழிலாக உள்ளது. இத்தொழிலுக்கு தேவையான முக்கிய மூலப்பொருளான காகிதத்தின் விலை கடந்த 2 மாதங்களில் மட்டும் டன்னுக்கு ரூ.1,000 வீதம் 8 முறை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், அட்டைப்பெட்டி உற்பத்திக்கு தேவையான இதர மூலப்பொருட்களின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

மேலும், காகிதம் உள்ளிட்ட மூலப்பொருட்களை ரொக்கமாக மட்டுமே வாங்க வேண்டிய நிலை உள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் மின்கட்டணமும் உயர்ந்துள்ளதால், உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

உற்பத்தி நிறுத்தம்

இந்த நிலையில், மூலப்பொருட்களின் தொடர் விலை உயர்வை சுட்டிக்காட்டும் வகையிலும், தங்களது கோரிக்கையை வெளிப்படுத்தும் வகையிலும், வரும் 9 மற்றும் 10-ந் தேதிகளில் அட்டைப் பெட்டி உற்பத்தியை நிறுத்த உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT