தமிழக செய்திகள்

மூலப்பொருட்கள் விலை உயர்வு: உள்நாட்டு ஆடை உற்பத்தி 40 சதவீதம் குறைவு

திருப்பூரில் உள்நாட்டு ஆடை தயாரிப்பில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் உள்ளன.

திருப்பூர்,

திருப்பூரில் வெளிநாட்டு ஆடை வர்த்தகத்துக்கு இணையாக உள்நாட்டு ஆடை வர்த்தகம் முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கிருந்து கேரளம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டி யம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆடைகள் அதிகம் அனுப்பி வைக்கப்படுகிறது. திருப்பூரில் உள்நாட்டு ஆடை தயாரிப்பில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் உள்ளன.

கோடை காலத்துக்கான ஆடை தயாரிப்பு ஆர்டர்கள் பெறப்பட்டு ஆடைகள் அனுப்பி வைத்துள்ளனர். கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மாணவிகளுக்கான உள்ளாடைகள், சிம்மிஸ், சார்ட்ஸ், மாணவர்களுக்கான உள்ளாடைகள் தயாரிப்பு ஆர்டர்கள் வரத்தொடங்கியுள்ளன. ஆனால் தற்போது நூல் விலை உயர்வு காரணமாகவும், ஆட்கள் பற்றாக்குறை காரணமாகவும் ஆர்டர்களை எடுக்க தயங்கி வருகிறார்கள்.

கடந்த 3 மாதங்களில் நூல் விலை கிலோவுக்கு ரூ.24 வரை உயர்ந்துவிட்டது. வெளிநாடுகளில் போர் சூழல் காரணமாக மூலப்பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இதன் காரணமாக ஆடை தயாரிப்பு செலவு 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம் (சைமா) சார்பில் ஆடைகளின் விலையை 7 சதவீதம் உயர்த்துவது என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த விலை ஏற்றம் கட்டுப்படியாகவில்லை என்றாலும், வேறு வழியின்றி ஆடை தயாரிப்பை தொடர்வதாக உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சைமா சங்க துணைத்தலைவர் பாலசந்தர் கூறும் போது, 'மூலப்பொருட்கள் விலை உயர்ந்து விட்டதால் ஆடை களின் உற்பத்தி விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளது. தேர்தல் காரணமாக வெளிமாநில, வெளிமாவட்ட தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றுள்ளனர். ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வால் புதிய ஆர்டர்கள் எடுக்க தயக்கமாக உள்ளது. இதன்காரணமாக கடந்த 1 மாதமாக உள்நாட்டு ஆடை உற்பத்தி 40 சதவீதம் குறைந்துள்ளது. அதுபோல் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு 25 சதவீதம் ஆர்டர்கள் வருகை குறைந்துள்ளது.' என்றார்.