திருப்பூர்,
அவினாசி கைகாட்டிபுதூரை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவருடைய மகள் ரிதன்யா (வயது 27). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தியின் மகன் கவின்குமாருக்கும் (27) கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் 11-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் கடந்த ஆண்டு ஜூன் 28-ந்தேதி காருக்குள் விஷம் குடித்து ரிதன்யா தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன்பு ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ்-அப்பில் அழுதபடி ஆடியோ அனுப்பி இருந்தார். அதில் தனது சாவுக்கு தனது கணவன், மாமனார், மாமியார் காரணம் என உருக்கமாக பேசிய ஆடியோ வெளியாகி தமிழகத்தையே உலுக்கியது. இதைத்தொடர்ந்து சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவின்குமார், ஈஸ்வரமூர்த்தி, சித்ராதேவியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், ரிதன்யா உயிரிழந்து இன்றோடு ஓராண்டு கடந்துள்ளது. அவரது முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, ரிதன்யாவின் குடும்பத்தினர் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் ரிதன்யாவின் தந்தை பேசுகையில், தனது மகளுக்கு நேர்ந்த கதி வேறு எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது என்றும், குற்றவாளிகளுக்கு கடுமையான ஆயுள் தண்டனை கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.