சென்னை,
பிரதமரின் பழங்குடியினர் நலத்திட்டமான பி.எம். ஜன்மன் திட்டத்தின் கீழ், கோவை, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு சாலை இணைப்பு வசதி ஏற்படுத்துவதற்காக ரூ.4.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பழங்குடியினர் வசிக்கும், இதுவரை சாலை இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு சாலை வசதி ஏற்படுத்தும் வகையில், 2025-26-ம் ஆண்டுக்கான பி.எம். ஜன்மன் திட்டத்தின் முதல் கட்டத்தில் 4 சாலைப் பணிகளுக்கு மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் பணிகளின் மொத்த நீளம் 10.96 கிலோமீட்டர் ஆகும். இதற்கான மொத்த திட்ட மதிப்பீடு ரூ.9.07 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்காக 2026-27 நிதியாண்டில் மத்திய அரசின் பங்காக ரூ.2.50 கோடியும், மாநில அரசின் பங்காக ரூ.1.67 கோடியும் வழங்கப்பட உள்ளன. இதையடுத்து மொத்தம் ரூ.4.17 கோடி செலவினத்திற்கு தமிழக அரசு நிர்வாக மற்றும் நிதி அனுமதி வழங்கியுள்ளது. இந்த அரசாணையை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளர் பிரசாந்த் எம். வட்நேரே வெளியிட்டுள்ளார்.