சென்னை,
சாலைகளை புனரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல். இது தொடர்பாக, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
மக்களின் உயிரை குடிக்கும் மழைநீர் வடிகால் பள்ளங்கள். சென்னை அண்ணாநகரில் சாலையோரம் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தவறி விழுந்த பெண் ஒருவர் அநியாயமாக உயிரிழந்துவிட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த வருத்தமளிக்கின்றன.
சென்னை முழுவதிலும் இதுபோன்ற மூடப்படாத மழைநீர் வடிகால் பள்ளங்கள் நிறைய தென்படுகின்றன. சாதாரண நேரத்தில் அவைகளை கடந்து செல்வது எளிதாக இருந்தாலும், மழை காலங்களில் முழுக்க நீர் நிரம்பி சிறு குளம் போலவே காட்சியளிக்கும் அந்தப் பள்ளங்களை பெரும்பாலான மக்கள் கவனிக்க தவறி விடுகின்றனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்ந்து வருகிறது.
எனவே, தமிழகம் முழுவதிலுமுள்ள மழைநீர் வடிகால் பள்ளங்களை உடனடியாக மூடவும், குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலைகளை புனரமைக்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டுமென முதல்-அமைச்சர் விஜய்யை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.