கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

ரோடு ஷோ: இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வருகிற ஜனவரி 5-ம் தேதிக்குள் வெளியிட தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கரூரில் தவெக விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ரோடு ஷோ உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளுடன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு, ரோடு ஷோ உள்ளிட்ட அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக்கோரி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.

இதன்படி, தமிழ்நாடு அரசு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியது. இந்த வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் அரசு விதித்துள்ள நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் ஜனநாயகத்துக்கு விரோதமாக இருப்பதாக அதிமுகவும், தவெகவும் பதில் மனுக்களை தாக்கல் செய்தன.

பின்னர் இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்ச் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று பிறப்பித்தனர்.

அதில் அரசியல் கட்சிகள் கூறியுள்ள ஆலோசனைகளை பரிசீலித்து, இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வருகிற ஜனவரி 5-ம் தேதிக்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும் வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அவற்றை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT