தமிழக செய்திகள்

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிக்க முயன்ற கொள்ளையன் கைது

வெள்ளவேடு போலீஸ் நிலையத்திற்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையை அடுத்த திரு மணம் கிராமத்தை சேர்ந்தவர் காயத்ரி. இவர் திருநின்றவூருக்கு சென்றுவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

நெமிலிச்சேரி அருகே திரு மணம் பகுதியையொட்டி அவர் சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென காயத்ரியின் அருகில் வந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறிக்க முயன்றார்.

போலீசார்

இதனால் அதிர்ச்சி அடைந்த காயத்ரி, சற்றும் பதற்றமடையாமல் உடனடியாக சுதாரித்துக்கொண்டு, வெள்ளவேடு போலீஸ் நிலையத்திற்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். சில நிமிடங்களிலேயே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வெள்ளவேடு போலீசார், தப்பியோட முயன்ற மர்ம நபரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவரை போலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், பிடிபட்டவர் செங்கல் பட்டை அடுத்த திம்மாவரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 46) என்பது தெரிய வந்தது. இவர் மீது ஏற்கனவே பல்வேறு போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும், தொடர்ந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததும் கண்டறியப்பட்டது.

கைது

இதையடுத்து, ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். நீதிபதியின் உத்தரவின் பேரில் அவரை புழல் மத்திய சிறையில் அடைத்தனர். சாமர்த்தியமாக செயல்பட்டு கொள்ளையனை பிடிக்க உதவிய காயத்ரியையும், விரைந்து செயல்பட்ட போலீசாரையும் அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

SCROLL FOR NEXT