மதுரை
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் கடந்த 12-ம் தேதி அதிகாலையில் 11 கிலோ எடையுள்ள பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான நிஷாந்த் தர்மபுரி மாவட்டம் சேசம்பட்டி பகுதியில் அதியமான்கோட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து மதுரை தனிப்படை காவல்துறையினர் அதியமான்கோட்டை காவல்நிலையத்தில் இருந்து நிஷாந்தை மதுரை எஸ்.எஸ்.காலனி காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு நிஷாந்திடம் துணை போலீஸ் கமிஷனர் இனிகோ திவ்யன் தலைமையில் விசாரணை நடத்தினர். ஏற்கனவே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிஷாந்தின் தோழி மீனாட்சியிடம் இருந்து 5 கிலோ 500 கிராம் நகைகள் மீட்கப்பட்ட நிலையில் இதுவரை 11 கிலோ 900 கிராம் நகைகள் மொத்தமாக முழுமையாக மீட்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தகவல் கூறப்படுகிறது.
மேலும் கொள்ளையன் நிஷாந்தை டிசம்பர் 1ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி லட்சுமி பிரியா உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறையில் நிஷாந்த் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிஷாந்தை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மதுரை மாவட்ட 5-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் எஸ். எஸ்.காலனி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை நாளை (வியாழக்கிழமை) வருகிறது. இந்த விசாரணையின் போது பகல் 12 மணி அளவில் நிஷாந்தை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் உரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.