செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த தையூர் கிராம பழைய மனைபிரிவு ஒன்றில் கடந்த 17-ந்தேதி காலை வாலிபர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடினர். அப்போது அங்குள்ள பாழடைந்த விவசாய கிணற்றில் நாய்க்குட்டி ஒன்று தவறி விழுந்து கிடப்பதை கண்டனர். அந்த வாலிபர்கள், கிணற்றில் இறங்கி நாய்க்குட்டியை மீட்டனர்.
அப்போது கிணற்றில் ராக்கெட் லாஞ்சர் போன்று மர்ம பொருள் ஒன்று இருப்பதை கண்டெடுத்தனர். இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று, ராக்கெட் லாஞ்சரை பாதுகாப்பாக மீட்டு உயர் அதிகாரிகள் உதவியுடன் ராணுவத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் தமிழ்நாடு கமாண்டோ படையை சேர்ந்தவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, ராக்கெட் லாஞ்சர் வெடிகுண்டை, பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி பாதுகாப்பாக பூமியில் புதைத்தனர். மேலும் அப்பகுதிக்கு யாரும் செல்லாதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் 12 நாட்கள் கழித்து நேற்று அந்த ராக்கெட் லாஞ்சர் வெடிகுண்டு செயலிழக்க வைக்கப்பட்டது. அதன்படி ராணுவ உயரதிகாரி உள்ளிட்ட வெடிகுண்டு நிபுணர்கள் 6 பேர் கொண்ட குழு நேற்று பகலில் ராக்கெட் லாஞ்சர் புதைக்கப்பட்ட இடத்துக்கு சென்று உள்ளூர் போலீசாரின் பாதுகாப்புடன் அதே இடத்தில் ராக்கெட் லாஞ்சர் வெடிகுண்டை வெடிக்க வைத்து செயலிழக்க வைத்தனர். அது வெடித்தபோது வானத்தை நோக்கி பல அடி உயரத்துக்கு கரும்புகை மூட்டம் எழுந்தது.