திண்டுக்கல்,
உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவில், மலை மீது அமைந்துள்ளது. அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல படிப்பாதை, யானைப்பாதை பிரதான வழிகளாக உள்ளன. இதுதவிர பக்தர்கள் மலைக்கோவிலுக்கு எளிதில் சென்றுவர ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகள் பயன்பாட்டில் உள்ளது. இதில் ரோப்கார் வழியாக விரைவாகவும், பழனி மலையின் இயற்கை அழகை பார்த்து ரசித்தபடியும் செல்லலாம் என்பதால் பெரும்பாலானோர் ரோப்காரில் செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் இந்த ரோப்கார் சேவை பக்தர்களுக்கு சிறந்த சுற்றுலா அனுபவத்தை கொடுக்கிறது.
பழனி ரோப்கார் நிலையத்தில் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவது வழக்கம். அப்போது ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு பணி மேற்கொள்ளப்படும். அதன்படி பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில், வருடாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை 20-ந்தேதி முதல் 45 நாட்களுக்கு ரோப் கார் சேவை இயங்காது என கோவில் நிர்வாகம் தெரிவித்தது.
அதன்படி, ஜூலை 20-ந்தேதி முதல் செப்டம்பர் 2-ந்தேதி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த காலகட்டத்தில் பக்தர்கள் மின்இழுவை ரெயில், படிப்பாதையை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு சென்று வந்தனர்.
பராமரிப்புப் பணியின் முக்கிய பணிகளான புதிய பெட்டி பொருத்தம், சோதனை ஓட்டம் மற்றும் புனரமைப்புப் பணிகள் போன்றவை நடைபெற்றன. தற்போது பணிகள் அனைத்தும் நிறைவுபெற்றன. இந்த நிலையில், வருகிற 12-ந்தேதி முதல் மீண்டும் ரோப் கார் சேவை தொடங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.