தமிழக செய்திகள்

போலீஸ் நிலையத்தில் இருந்து கை விலங்குடன் தப்பிய ரவுடி - காதலி மூலம் சினிமா பாணியில் பிடித்த போலீசார்

போலீசார் அசந்த நேரத்தில் ரவுடி கைவிலங்குடன் தப்பியோடி தலைமறைவானார்.

சென்னை,

சென்னை காசிமேடு மீன்பிடி துறை முக போலீஸ் நிலையத்தில் இருந்து கைவிலங்குடன் தப்பியோடிய ரவு டியை, அவரது காதலியை வைத்தே போலீசார் சினிமா பாணியில் கைது செய்தனர்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை திடீர் நகர் பகுதியை சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி அபிஷேக் (19 வயது). இவர் மீது வண்ணாரப்பேட்டை, ராயபுரம், காசிமேடு உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி மற்றும் கஞ்சா கடத்தல் உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த 11-ந்தேதி அதிகாலை, காசிமேடு பல்லவன் நகர் பகுதியில் சுற்றித்திரிந்த அபிஷேக்கை தனிப்படை போலீசார் பிடித்து, காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு போலீசார் அசந்த நேரத்தில் அபிஷேக் கைவிலங்குடன் தப்பியோடி தலைமறைவானார்.

பின்னர் விம்கோ நகரில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு சென்று அங்கிருந்து ஒரு பையையும், செல்போனையும் வாங்கிக்கொண்டு கோயம்பேடு வழியாக புதுச்சேரிக்கு தப்பி சென்றார். தலைமறைவான ரவுடியை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார், அவர் கொண்டு சென்ற செல்போன் எண்ணை வைத்து தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, அவர் எண்ணூர் பகுதியை சேர்ந்த தனது கள்ளக்காதலியுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தது தெரிய வந்தது.

போலீசார் அந்த பெண்ணின் மூலம் அபிஷேக்கை தொடர்பு கொண்டு, உடனடியாக சென்னைக்கு வருமாறு அழைக்க செய்தனர். காதலி மீது உள்ள நம்பிக்கையில், புதுச்சேரியில் இருந்து கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு நேற்று அபிஷேக் வந்தார்.

அங்கு மறைந்திருந்த தனிப்படை போலீசார், பஸ்சை விட்டு இறங்கிய அபிஷேக்கை அதிரடியாக சுற்றி வளைத்துப் பிடித்தனர். தப்பியோடிய ரவுடியை மீண்டும் கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பியோடிய ரவுடியை போலீசார் கள்ளக்காதலி மூலம் சினிமா பாணியில் பிடித்த சம்பவம் சென்னை போலீஸ்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.