சென்னை,
தங்களை தீர்த்துக் கட்ட திட்டமிட்டதால் நாங்கள் முந்திக்கொண்டு ரவுடியை கொலை செய்ததாக கைதான 5 பேரும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சாகுல் அமீது (வயது 27). ரவுடியான இவர் மீது கொலை, கொலை மிரட்டல், கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இவர், கேளம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கே.எஸ்.எஸ் நகர் பகுதியையொட்டிய மயானத்தில் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுபற்றி கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலை வழக்கு தொடர்பாக அருண் (31), ஸ்ரீகாந்த் (35), சூர்யா (32), அப்துல் ரகுமான் (25) ஆகிய 4 பேரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில் இச்சம்பவம் தொடர்பாக கொளத்தூரைச் சேர்ந்த அஜய் (25) என்ற மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். கைதான 5 பேரும் போலீசாரிடம் அளித்து உள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
சாகுல் அமீதும், நாங்களும் நண்பர்களாக இருந்தோம். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டோம். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட வாக்குவாதத்தில் சாகுல் அமீதை அரிவாளால் வெட்டியதால், எங்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதன்பிறகு சாகுல் அமீது, எங்களை தீர்த்துக்கட்ட திட்டமிட்டு இருப்பதாக எங்களுக்கு தெரியவந்தது. எனவே நாங்கள் முந்திக்கொண்டு அவரை கொலை செய்ய திட்டமிட்டோம். கஞ்சா வழக்கில் சிறையில் இருந்த சாகுல் அமீது கடந்த 27-ந் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். கடந்த சனிக்கிழமை மாலை அவரை தேடி வீட்டுக்கு சென்றோம். அவர் அங்கு இல்லாததால் வழக்கமாக மது அருந்தும் இடங்களில் தேடினோம். இரவு மயானத்தில் போதையில் படுத்திருந்த சாகுல் அமீதை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொன்றோம்.
இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
கொலைக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் மற்றும் 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
சாகுல் அமீது மற்றும் அருண் தரப்பினருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்த நிலையில், இருதரப்பினரின் நடவடிக்கைகளையும் போலீசார் தொடர்ந்து கண்காணிக்காததால், சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த 2-வது நாளிலேயே சாகுல் அமீது கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.