தமிழக செய்திகள்

கர்ப்பிணிக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி: பொதுமக்கள் தாக்கியதில் உயிரிழப்பு

அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏரல்,

ஏரலில் அரிவாளுடன் ரகளை செய்த ரவுடியை பொதுமக் களே அடித்துக் கொன்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் சேர்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி. இவருடைய மகன் தனுஷ்கோடி (வயது 36). ரவுடியான இவர் மீது கொலைமுயற்சி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ஏரல் போலீஸ் நிலையத்தில் உள்ளன. இவர் கடந்த 23-ந்தேதி மதியம் மது போதையில் அரிவாளுடன் ஏரல் சிவன் அருகில் நின்று ரகளை செய்ததாக கூறப்படுகிறது.

கர்ப்பிணிக்கு மிரட்டல்

அப்போது, ஏரல் கணேசபுரத்தைச் சேர்ந்த சக்தி மனைவி 3 மாத கர்ப்பிணியான பேச்சியம்மாள் (23) என்பவர் மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு தனது வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

அவரிடம், தனுஷ்கோடி அரிவாளைக் காட்டி, அவதூறாக பேசி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் "உன்னையும், உனது கணவரையும் கொலை செய்து விடுவதாக" மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

பொதுமக்கள் தர்ம அடி

இதையடுத்து பேச்சியம்மாள் அங்கிருந்து கணேசபுரத்தில் உள்ள தனது வீட்டுக்கு வேகமாக சென்றார். பின்னர் தனுஷ்கோடி கணேசபுரத்துக்கும் சென்று தகராறு செய்தார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு, தனுஷ்கோடிக்கு தர்மஅடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு போராடியவாறு கிடந்தார்.

இதுகுறித்து ஏரல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று, படுகாயமடைந்த தனுஷ்கோடியை மீட்டு சிகிச்சைக்காக ஏரல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

போராட்டம்

இதையடுத்து தனுஷ்கோடியை தாக்கியவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதற்கிடையே பேச்சியம்மாள் தன்னை தனுஷ்கோடி அவதூறாக பேசி மிரட்டியதாக ஏரல் போலீசில் புகார் அளித்தார். அதேபோல் தனுஷ்கோடி மனைவி செல்வி என்ற பிரம்மசக்தி (30) தனது கணவரை கணேசபுரத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் தாக்கியதாக போலீசில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த தனுஷ்கோடிக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். ஏரலில் அரிவாளுடன் ரகளை செய்த ரவுடியை பொதுமக்களே அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT