தமிழக செய்திகள்

பழனியில் ரூ.100 கோடி நில மோசடி: சார்பதிவாளர், பத்திர எழுத்தரை காவலில் விசாரிக்க போலீசார் மனு

நில மோசடி தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து, 100-க்கும் மேற்பட்டோரிடம் விசாரித்தனர்.

பழனி,

ரூ.100 கோடி நில மோசடி

பழனியில், தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமாக ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் இருக்கிறது. அந்த நிலம் 2 பேருக்கு மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இது குறித்து திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து, 100-க்கும் மேற்பட்டோரிடம் விசாரித்தனர். அதோடு பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர்.

அதையடுத்து திண்டுக்கல்லை சேர்ந்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், விழுப்புரத்தை சேர்ந்த ஆசிரியர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய திருப்பூர் பாப்பன்குளம் வெள்ளத்துரை, பழனியை சேர்ந்த சேதுபதி மற்றும் வக்கீல் அன்வர்தீன், ஒட் டன்சத்திரத்தை சேர்ந்த பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷ் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

காவலில் விசாரிக்க மனு

இதைத்தொடர்ந்து ஜாமீன் கேட்டு 6 பேரும் தாக்கல் செய்த மனுவை, திண்டுக்கல் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதன்பின்னர் மாவட்ட கோர்ட்டில் சார்ப திவாளர் ஜஸ்டின் மணிகண்டன், பத்திர எழுத்தர் ஜெயபிர காஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவும் தள்ளுபடி ஆனது. மேலும் முருகதாஸ் தாக்கல் செய்த ஜாமீன் மனு இன்று (புதன்கிழமை) மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையே நில மோசடி வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந் துள்ளது. இதனால் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், பத் திர எழுத்தர் ஜெயபிரகாஷ் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர். இதற்காக திண்டுக்கல் 1-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு இன்று மாஜிஸ்திரேட்டு பாக்கியராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது. இதனால் இருவரும் போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். அந்த 2 பேரையும் காவலில் எடுத்து விசாரித்தால் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம். அதன்மூலம் மேலும் சிலர் சிக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.