சென்னை,
விழுப்புரம் மாவட்டத்தில் 771 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.100.25 கோடி வங்கிக் கடன் இணைப்பையும், 24 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும் அமைச்சர் என். ஆனந்த் வழங்கினார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, இன்று ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகளையும், கருணை அடிப்படையில் 24 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். மேலும், காணொளி வாயிலாக விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.15.84 கோடி மதிப்பீட்டில் நிறைவு செய்யப்பட்ட 22 வளர்ச்சித் திட்டப் பணிகளைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் பெண்களின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் தன்னிறைவு என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையில், மாநிலம் முழுவதும் 26,000 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.3,000 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, காணை உள்ளிட்ட ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த 659 குழுக்களுக்கு ரூ.85.09 கோடியும், விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட நகர்ப்புறப் பகுதிகளைச் சேர்ந்த 112 குழுக்களுக்கு ரூ.15.16 கோடியும் என மொத்தம் 771 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.100.25 கோடி வங்கிக் கடன் இணைப்பினை அமைச்சர் வழங்கினார்.
இந்நிதியுதவியின் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் சிறு தொழில்கள், உணவுப் பொருட்கள் தயாரிப்பு, கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சுயதொழில்களை மேம்படுத்தி, பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறுவதுடன், மற்ற பெண்களுக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
மேலும், கருணை அடிப்படையில் 24 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய அமைச்சர் அவர்கள், குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துரைத்து, பணி நியமனம் பெற்ற அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பேரூராட்சித் துறை, பள்ளிக்கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.15 கோடியே 84 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் நிறைவு செய்யப்பட்ட 22 வளர்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சர் காணொளி வாயிலாகப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார்.
வானூர் சட்டமன்றத் தொகுதியில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.3.57 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் சேமிப்புக் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.
வளவனூர் பேரூராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் 2.0-ன் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய கழிவறைக் கட்டடமும், திருக்கோவிலூர் பகுதியில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடமும் அமைக்கப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், நபார்டு திட்டத்தின் கீழ் இராம்பாக்கம், இல்லோடு, பகண்டை, குமுளம், திருவெண்ணெய்நல்லூர் மற்றும் வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் மாணவர்களுக்குக் கூடுதல் வகுப்பறை வசதிகளுடன் தரமான கல்விச் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வானூர் சட்டமன்றத் தொகுதியில் ரூ.21.60 லட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓரிட சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் அரசின் பல்வேறு நலத்திட்டச் சேவைகளை எளிதில் பெறுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஊரகப் பகுதிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், பொம்பூர், வில்வநத்தம், கூரானூர், சேமங்கலம், அரசூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள், நியாயவிலைக் கடைக் கட்டடங்கள், அங்கன்வாடி மையங்கள், ஊராட்சி செயலகக் கட்டடங்கள் மற்றும் வகுப்பறைக் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், செஞ்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எய்யில் காலனி பகுதியில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், மயிலம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வடபுத்தூர் பகுதியில் 30,000 லிட்டர் மற்றும் நங்கியாநந்தல் பகுதியில் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இத்திட்டங்கள் மூலம் பொதுமக்களின் குடிநீர்த் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதுடன், கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்க்கைத் தரமும் மேம்படும்.
மகளிரின் பொருளாதார முன்னேற்றம், வேலைவாய்ப்பு உருவாக்கம், அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்பாடு, சுகாதாரம், வேளாண்மை, குடிநீர் மற்றும் கிராமப்புற அடிப்படை வசதிகள் என அனைத்துத் துறைகளிலும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
மக்களின் தேவைகளை அறிந்து, அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான வளர்ச்சியை உறுதி செய்து, மகளிர் முன்னேற்றம் மற்றும் கிராமப்புறக் கட்டமைப்பு மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளித்து, மக்கள் நலத் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசின் மக்கள் நலப்பணிகளுக்கு இந்நிகழ்வுகள் மேலும் வலுசேர்க்கின்றன.
இந்நிகழ்வில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் கே.ஜே. ஷேக் அப்துல் ரஹ்மான், விழுப்புரம் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆனந்த் குமார் சிங், துணை ஆட்சியர் ஆகாஷ், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் சி. சிவகுமார் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனிசாமி திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன் மற்றும் அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.