திண்டுக்கல்,
ரூ.100 கோடி கோவில் நிலம் மோசடி வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார், விசாரணையை தொடங்கி உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பூங்கா ரோட்டில் தண்டபாணி சுவாமி மடம் அறக்கட்டளைக்கு சொந்தமான 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் உள்ளது. ஐகோர்ட்டு உத்தரவுப்படி நிலத்துக்கான தக்காராக பழனி முருகன் கோவில் இணை ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி கோவில் நிர்வாகம் இந்த நிலத்தை நிர்வகித்து வருகிறது.
ரூ.100 கோடி மதிப்பிலான இந்த நிலம் கடந்த ஆண்டு பழனி முருக பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக மாற்றப்பட்டது. இந்நிலையில் தண்டபாணி சுவாமி மட நிலம் கடந்த 6-ந்தேதி பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் தனியார் 2 பேருக்கு ரூ.2 கோடிக்கு கிரையமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது. பழனி கோவில் கட்டுப்பாட்டிலுள்ள நிலத்தை முறைகேடாக பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த முறைகேடு பதிவு குறித்து பழனி அடிவாரம் போலீசில் கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பழனி சார்பதிவாளராக இருந்த ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்ற விழுப்புரத்தை சேர்ந்த முருகதாஸ், அதனை வாங்கிய திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பாப்பன்குளத்தை சேர்ந்த வெள்ளத்துரை, பழனி அருகே உள்ள டி.கே.என்.புதூரை சேர்ந்த சேதுபதி என 4 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனிடையே ரூ.100 கோடி நிலம் முறைகேடாக பதிவு செய்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகிய 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தொடர்ந்து முறைகேடு பதிவை ரத்து செய்ய கோரி பழனி கோவில் இணை ஆணையர் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதை விசாரித்த ஐகோர்ட்டு தண்டபாணி சுவாமி மடத்தின் சொத்து தனியாருக்கு பத்திரப்பதிவு செய்தது செல்லாது என உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த முறைகேடு தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார்.
அதையடுத்து சி.பி.சி.ஐ.டி. மதுரை போலீஸ் துணை சூப்பிரண்டு அஜய் தங்கம் தலைமையிலான 15 பேர் கொண்ட போலீஸ் குழுவினர் நேற்று பழனி வந்தனர். பின்பு முறைகேடு பதிவு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
முதற்கட்டமாக பழனி கோவில் அலுவலகம் சென்று, நிலத்தின் ஆவணங்களை சேகரித்தனர். பின்னர் அடிவாரத்தில் உள்ள தண்டபாணி சுவாமி மடத்து நிலத்தை பார்வையிட்டனர். அப்போது, நிலத்தின் வரைபடத்தை ஆய்வு செய்து அதன் எல்லைகளையும் பார்வையிட்டனர்.
தொடர்ந்து பழனி கோவில் அலுவலகம் சென்று, நிலம் தொடர்பான ஆவணங்கள், பதிவு செய்த விவரங்கள், கோவில் அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். மேலும் பழனியில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று, தண்டபாணி சுவாமி மடம் தொடர்பாக ஏற்கனவே பதிவான ஆவணங்களை சேகரித்தனர். பழனியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடாக பதிவு செய்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணையை தொடங்கியது பழனியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் திண்டுக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நிலம் முறைகேடு வழக்கு தொடர்ந்த முருகானந்தம் உள்பட அறநிலையத்துறை அதிகாரிகளிடம் சி.பி.சி.ஐ.டி. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஜிதா விசாரணை நடத்தி வருகிறார். மேலும் வருவாய்த்துறை மற்றும் பத்திரபதிவுத்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.