ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பெட்ஷீட், துண்டுகள் இந்திய அளவில் பிரபலமானது. குளிர் காலம் மற்றும் பொங்கல் பண்டிகை சமயத்தில் அதிக அளவில் படுக்கை விரிப்புகள் விற்பனை ஆகும்.
ஆனால், இந்த ஆண்டு பருவநிலை மாற்றம், விற்பனை மந்தம் போன்ற பிரச்சினைகளால் சென்னிமலை பகுதியில் ரூ.100 கோடி மதிப்பிலான பெட்ஷீட்கள் தேக்கம் அடைந்துள்ளன. இதனால், உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, சென்னிமலை ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறும்போது, "ஜனவரி மாதத்திற்கு பிறகு பெட்ஷீட் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. பருவநிலை மாற்றம், விற்பனை மந்தமானதாலும், 2 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் பெட்ஷீட்கள், கிடங்குகளில் தேங்கியுள்ளன.
இவற்றின் மதிப்பு ரூ.100 கோடிக்கு மேல் இருக்கும். ஏற்கனவே, பருத்தி நூல் விலை 5 முதல் 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால், உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இதனால், சிறு, நடுத்தர ஜவுளி உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடியை சந்தித்துள்ளனர்" என்று கூறினார்கள்.