தமிழக செய்திகள்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.10,000 கோடி விதிமீறல்: சிஏஜி அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது - வானதி சீனிவாசன்

விதி மீறல் தொடர்பாக சிஏஜி அதிர்ச்சி தரும் அறிக்கையை வெளியிட்டுள்ளதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

ரூ. 1602.20 கோடி மதிப்பிலான 52 திட்டங்கள் செயல்படுத்தப்படவே இல்லை என பா.ஜ.க. முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள 'எக்ஸ்' தள பதிவில் கூறியிருப்பதாவது;-

ஸ்மார்ட் சிட்டி திட்டம்

இந்திய பெருநகரங்களை அழகுபடுத்தவும், நகரங்களின் அடிப்படைக் கட்டமைப்பு வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தவும், மத்திய அரசின் உன்னத திட்டமான ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் தமிழ்நாட்டில் ரூ. 10,000 கோடியில் மேற்கொள்ளப்பட்ட திட்டப் பணிகள் பலவற்றில் மிகப் பெரிய அளவில் விதி மீறல் நடைபெற்றிருப்பதாக சிஏஜி-யால் வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையானது அதிர்ச்சி அளிக்கிறது.

கடந்த 2015 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்கான நிதியை மாநகராட்சியின் சொந்த நிதியில் செய்யப்பட வேண்டிய பணிகளில் சேர்த்துள்ளதன் மூலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் குறிக்கோளானது சிதைக்கப்பட்டு வழக்கமான மாநகராட்சியின் பணிகளில் சேர்த்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

52 திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை

அவற்றில் குறிப்பாக ரூ. 1602.20 கோடி மதிப்பிலான 52 திட்டங்கள் செயல்படுத்தப்படவே இல்லை என்றும், மாநகராட்சிகிள் நிதியின் கீழ் செயல்படுத்தியிருக்க வேண்டிய ரூ. 21.42 கோடியிலான 5 பணிகள் ஸ்மார்ட் சிட்டி நிதியின் செயல்படுத்தப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கிழ் அனுமதியே பெறாமல் சில திட்டங்களும், அரசின் விளம்பரத்திற்காகவும், அரசு அலுவலகங்களின் பயன்பாட்டிற்கான கார், பர்னிச்சர்கள் முதலிய பொருட்கள் வாங்கியதும், ஸ்மார்ட் சிட்டி நிதியை தமிழக துறைகளின் நிதிக்கணக்கிற்கு மாற்றியிருப்பதுமாக தோண்டத் தோண்ட கிளம்பிய பூதம் போல் அடுத்தடுத்து விதிமீறல்கள் அதிர்ச்சி அடைய வைக்கிறது.

கொட்டிக் கொடுத்த மத்திய அரசு

மத்திய பா.ஜ.க அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது என்றெல்லாம் குறைகூறிக்கொண்டு அரசியல் செய்பவர்களுக்கு இப்போது புரிந்திருக்கும் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு எவ்வளவு கொட்டிக் கொடுத்தும் அதை முறையாகச் செலவிடாமல் தமிழகத்தின் வளர்ச்சியைப் பாதித்தவர்கள் யார் என்று..!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT