சென்னை,
தமிழகத்தின் சென்னை, காமராஜர் (எண்ணூர்), வ.உ.சிதம்பரனார் (தூத்துக்குடி) ஆகிய 3 துறைமுகங்களில் சுமார் ரூ.1,100 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்தத் திட்டங்கள் மூலம் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பதுடன், துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறனும் மேம்படும் என்று துறைசார் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை துறைமுகத்தில் ரூ.158.17 கோடி மதிப்பிலான 4 திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். ஏற்றுமதி, இறக்குமதி பொருட்களைக் கையாள்வதற்காக 4 புதிய கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சொகுசு கப்பல்களில் வரும் பயணிகளுக்கான முனையமும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கட்டமைப்பு வசதிகள் மூலம் வெளிநாட்டு சொகுசு கப்பல்களை சென்னைக்கு அதிக அளவில் ஈர்க்க முடியும் என்று துறைமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
காமராஜர் துறைமுகத்தில், தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகம் இறக்குமதி செய்யும் நிலக்கரியைக் கையாள்வதற்காக ரூ.261 கோடி செலவில் அமைக்கப்பட்ட பிரத்யேக நிலக்கரி கையாளும் தளம் திறந்து வைக்கப்பட்டது.
இந்த வசதி மூலம் நிலக்கரியைக் கையாளும் பணிகளை மேம்படுத்துவதுடன், சரக்கு கையாளும் திறனையும் அதிகரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.517.19 கோடி செலவில் புதிய கன்டெய்னர் முனையம் அமைப்பதற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
தென் மாவட்டங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளின் முக்கிய நுழைவாயிலாக விளங்கும் இந்தத் துறைமுகத்தில் புதிய கன்டெய்னர் முனையம் அமைக்கப்படுவது, அதன் செயல்திறனை மேலும் வலுப்படுத்தும் என்று துறைமுகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மொத்தத்தில், தமிழகத்தின் 3 முக்கிய துறைமுகங்களில் மேற்கொள்ளப்படும் இந்த வளர்ச்சி திட்டங்கள் சரக்குப் போக்குவரத்து, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகளை மேம்படுத்துவதுடன், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.