சென்னை,
சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என்று சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று காவல்துறை-தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ், முதல்-அமைச்சர் விஜய் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் (Tamil Nadu Olympic City) அமைக்கப்படும்.
உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கங்கள், அதிநவீன விளையாட்டு உபகரணங்கள், உயர்தர செயல்திறன் பயிற்சி மையம் (High Performance Training Centre), அறிவியல் மற்றும் விளையாட்டு மருத்துவ மையங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான தங்குமிட வசதிகள் உள்ளிட்ட நவீன உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் பிற சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை வெல்லவும், ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லக்கூடிய திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கும் உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த விளையாட்டு மையமாகத் திகழும்.
தமிழ்நாட்டில் ஒரு புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் (Motor Sports City) உருவாக்கப்படும். இந்த நகரத்தில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் பந்தயத்தடம், அதற்கான நவீன உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பயிற்சி வசதிகள் ஏற்படுத்தப்படும். Formula 1, Formula 2, Formula 3, Formula 4 போன்ற சர்வதேச தரத்திலான போட்டிகள் நடத்துவதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.
இளைஞர்களின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் திறமைகளைக் கண்டறிந்து, பயிற்சி மற்றும் போட்டி வாய்ப்புகள் வழங்கி, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான வீரர்கள் உருவாக்கப்படுவார்கள். உலகத்தரம் வாய்ந்த மோட்டார் வாகன கார் பந்தய அரங்குகளை அமைப்பதன்மூலம், சுற்றுலா, சிறப்பு வாகன உற்பத்தித் தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மேம்பட வாய்ப்புகள் உள்ளது.
சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும். தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் சென்றுவர வசதிகள் மற்றும் பசுமைக் கட்டட தரநிலைகளுக்கு உட்பட்டு நவீன நிர்வாக வளாகம் உருவாக்கப்படும். போதுமான வாகன நிறுத்துமிடங்கள், மாநாட்டு அரங்குகள், பொதுமக்கள் சேவை மையங்கள் மற்றும் அலுவலர்களுக்கான நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும். அனைத்து அரசுத் துறைகளையும் ஒரே நிர்வாக வளாகத்தில் கொண்டுவந்து ஒருங்கிணைக்கப்படும்.