தமிழக செய்திகள்

தமிழகத்தில் மகளிர் திட்ட நிதியில் ரூ.125 கோடி முறைகேடு

போலியான பட்டியல்கள் தயார் செய்து பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மகளிர் திட்ட நிதியில் ரூ.125 கோடி முறைகேடு நடந்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வெளிவந்துள்ளது.

சென்னை,

மகளிர் திட்ட நிதி

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் 1983-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்திற்கு மத்திய, மாநில அரசுகள் சராசரியாக ஆண்டுக்கு சுமார் ரூ.15 ஆயிரம் கோடி நிதி வழங்கி வருகிறது. தமிழகத் தில் 38 மாவட்டங்களில் 388 வட்டார அளவிலான பிளாக்குகள் மற்றும் 12,500 கிராம இயக்க அலகுகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த மகளிர் மேம்பாட்டுக்கு வழங்கப்படும் நிதியானது தமிழகத்தில் 186 வட்டாரத்தில் சுமார் ரூ.125 கோடி முறை கேடு நடந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடு குறித்து தேனி மாவட்டம் மேலச்சொக்கநாதபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ராமகிருஷ்ணன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ரூ.125 கோடி முறைகேடு

அதில் கடந்த 5 மாதங்களில் மயிலாடுதுறை, திருவாரூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், தேனி, அரியலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், தூத்துக்குடி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சுமார் 186 பிளாக்குகளை தணிக்கை செய்ததில் சுமார் ரூ.125 கோடிக்கு மேல் போலியான பட்டியல்கள் தயார் செய்து பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது.

அந்த பணம் பயனாளிகளுக்கு செல்ல வேண்டிய நிதி, வட்டார இயக்க மேலாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் தனிநபர்களின் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர பல்வேறு வழிகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளன.

சி.பி.ஐ. விசாரணை

இதுவரை 186 வட்டாரங்களில் மட்டுமே தணிக்கை செய்யப் பட்ட நிலையில் ரூ.124 கோடியே 74 லட்சத்து 45 ஆயிரத்து 279 முறைகேடு நடந்துள்ளது. மீதம் உள்ள வட்டாரங்களில் தணிக்கை செய்தால் பல நூறு கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றது தெரியவரும். எனவே தமிழகம் முழுவதும் எவ்வளவு முறைகேடு செய்யப்பட்டுள்ளது என்பதை அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி முறைகேடு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.