சென்னை,
தமிழகத்தில் வீட்டு வசதி கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்துக்காக உலக வங்கியிடம் இருந்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) பெற்ற ரூ.15.50 கோடி கடன் தொகை எதற்காக செலவிடப்பட்டது என்பதற்கான ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து, அந்தத் தொகை எங்கு செலவிடப்பட்டது என்பது குறித்து சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் வீட்டு வசதி கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்கு கடந்த 2020-ம் ஆண்டு உலக வங்கி ஒப்புதல் அளித்தது.
இதன் கீழ், வீட்டு வசதி மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்காக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு (சி.எம்.டி.ஏ.) கடந்த 2022-ம் ஆண்டு ரூ.50 லட்சமும், 2023-ம் ஆண்டு ரூ.15 கோடியும் உலக வங்கி கடனாக வழங்கியது. வீட்டு வசதி கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிர்வாக நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வருவது உள்ளிட்ட பணிகளுக்காக இந்தத் தொகை ஒதுக்கப்பட்டது.
இதற்கிடையே, உலக வங்கியிடம் பெற்ற கடனுக்கான தொகையைத் திருப்பிச் செலுத்தும் பணிகளும் நடைபெற்றுள்ளன. கடந்த 2024-ம் ஆண்டு 2 தவணைகளில் தலா ரூ.46.87 லட்சம் அசல் தொகையும், தலா ரூ.21 லட்சம் வட்டியும் செலுத்தப்பட்டுள்ளன.
ஆனால், உலக வங்கியிடம் இருந்து பெறப்பட்ட ரூ.15.50 கோடி எந்தெந்தப் பணிகளுக்காகச் செலவிடப்பட்டது என்பது குறித்த விவரங்கள் மற்றும் அதற்கான ஆவணங்கள் தற்போது கிடைக்கவில்லை.
இதுகுறித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
உலக வங்கியிடம் இருந்து சி.எம்.டி.ஏ. கடன் பெற்ற விவரம், அந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்தியதற்கான ஆவணங்கள் மூலமாகவே தெரியவந்துள்ளது. ஆனால், உலக வங்கி வழங்கிய ரூ.15.50 கோடி எதற்காகச் செலவிடப்பட்டது என்பதற்கான எந்த ஆவணமும் சி.எம்.டி.ஏ. வசம் இல்லை.
இந்தத் தொகைக்கான செலவுகள் வேறு கணக்குத் தலைப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்று விசாரித்தபோதும் உரிய பதில் கிடைக்கவில்லை. எந்தக் கணக்குத் தலைப்பின் கீழ் கடன் பெறப்பட்டதோ, அதே தலைப்பின் கீழ்தான் செலவுகளும் கணக்கில் காட்டப்பட வேண்டும். அப்போதுதான் அந்தக் கணக்குகளைத் தணிக்கை செய்ய முடியும்.
கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அந்தப் பணம் எதற்காகப் பயன்படுத்தப்பட்டது என்பது இன்னும் புதிராகவே உள்ளது. இதுகுறித்து சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் ஒவ்வொரு பிரிவாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.