திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில், ஆந்திராவில் இருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 1 கோடியே 8 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மொண்டியம்மன் நகர் சோதனைச் சாவடி அருகே, பார்சல் லாரியை போலீசார் சோதனையிட்டபோது, மூன்று பைகளில் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஆந்திராவைச் சேர்ந்த இருவர் மற்றும் லாரி ஓட்டுநரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
சென்னையில் நகை வாங்குவதற்காக பணத்தை கொண்டு வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ள நிலையில், உரிய ஆவணங்கள் இல்லாததால் ஹவாலா பணமா? என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு, பணம் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.