தமிழக செய்திகள்

சென்னையில் சாலைப் பள்ளங்களைச் சீரமைக்க ரூ.21.80 கோடி ஒதுக்கீடு!

மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சாலைப் பள்ளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சென்னை,

சென்னையில் சாலைப் பள்ளங்களைச் சீரமைக்க ரூ.21.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

வடகிழக்குப் பருவமழையினால் சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை உடனுக்குடன் குளிர் தார்க்கலவை கொண்டு சீரமைக்கும் பணி மேற்கொள்வதற்கான வாகனங்களை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன், இன்று பார்வையிட்டு அனுப்பி வைத்தார்.

பள்ளங்களை சீர்செய்யும் பணி

தமிழ்நாடு முதல்-அமைச்சர், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில், மண்டலம் 1 முதல் 15 வரையிலான சாலைகளில் உள்ள பள்ளங்களை கான்கிரீட் கலவை மற்றும் குளிர் தார்க்கலவைகளைக் கொண்டு சீர்செய்யும் பணிக்காக, பேருந்து சாலைகளில் ரூ.9.25 கோடி மற்றும் உட்புறச் சாலைகளில் ரூ.12.55 கோடி என மொத்தம் ரூ.21.80 கோடி மதிப்பீட்டில் பள்ளங்களை சீர்செய்யும் பணிகள் (Road Patch Works) மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில், மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சாலைப் பள்ளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணியினை துரிதப்படுத்தும் விதமாக, மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன்,வடகிழக்குப் பருவமழையினால் சாலைகளில் ஏற்படும் பள்ளங்களை உடனுக்குடன் குளிர் தார்க்கலவை கொண்டு சீரமைக்கும் பணி மேற்கொள்வதற்கான 12 வாகனங்களை இன்று (02.11.2026) ரிப்பன் கட்டட வளாகத்தில் பார்வையிட்டு அனுப்பி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் இணை ஆணையாளர் (பணிகள்) சரவணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT