தமிழக செய்திகள்

சென்னையில் காரில் கொண்டு வந்த ரூ.23.5 லட்சம் பறிமுதல்: 6 பேர் கைது

சென்னை தியாகராயநகர் திருமலைப்பிள்ளை சாலையில் பாண்டிபஜார் போலீசார் வாகன சோதனை நடத்தியபோது, அந்த வழியாக வந்த ஒரு நம்பர் பிளேட் இல்லாத சொகுசு காரை மடக்கி சோதனையிட்டனர்.

சென்னை தியாகராயநகர் திருமலைப்பிள்ளை சாலையில் நேற்று முன்தினம் இரவு பாண்டிபஜார் போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக 'நம்பர் பிளேட்' இல்லாத சொகுசு கார் ஒன்று வந்தது.அந்த காரை மடக்கி போலீசார் சோதனை போட்டனர்.

அப்போது 500 ரூபாய் நோட்டுக்கட்டுகள் ஏராளமாக அந்த காரில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்தை பறிமுதல் செய்து போலீசார் எண்ணி பார்த்தனர். அதில் ரூ.23.5 லட்சம் இருந்தது.

காரில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது நண்பர்களுடன் பயணித்தார். அவர் காஞ்சீபுரத்திற்கு சாமி கும்பிட வந்ததாகவும், வரும் வழியில் மிளகாய் வியாபாரியிடம் தனக்கு வரவேண்டிய பணத்தை வாங்கி வந்ததாகவும் தெரிவித்தார்.

ஆனால் அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை வருமானவரித்துறையிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். வருமானவரித்துறை அதிகாரிகளுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஆந்திர தொழிலதிபர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.