தமிழக செய்திகள்

மலேசியாவில் படிக்கும் மாணவன் பாரதிதாசனுக்கு ரூ.23.95 லட்சம் விடுவிப்பு

இந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணம் ரூ.6 லட்சம், வாழ்வாதார தொகை ரூ.6 லட்சம் அனுப்பப்பட்டு விட்டதாக அமைச்சர் வன்னி அரசு தெரிவித்திருந்தார்.

சென்னை,

மலேசியாவில் படிக்கும் மாணவன் பாரதிதாசனுக்கு ரூ.23.95 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி படிப்பு

அண்ணல் அம்பேத்கர் உயர் கல்வித் திட்டத்தின்கீழ், மலேசியாவில் திசு பொறியியல் மற்றும் மீளுருவாக்கம் பிரிவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் பாரதிதாசன்.

இவர் சில மாதங்களுக்கு முன்பு, தனக்கு அண்ணல் அம்பேத்கர் உயர்கல்வித் திட்டத்தின்கீழ் கிடைக்கக் கூடிய நிதி வரவில்லை. ஆகையால், சக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களிடம் இருந்த கடன் பெற்று தன்னுடைய ஆராய்ச்சி படிப்பை தொடர்ந்து வருவதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

விமர்சனம்

இந்த வீடியோ தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆகையால், இந்த விவகாரம் ஆளும்கட்சியான தவெக மீதான விமர்சனங்களுக்கு வழி வகுத்தது. அதேசமயம், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, அரசு தரப்பில் அவ்வப்போது விளக்கம் அளித்து வருகிறார்.

அந்த வகையில், மாணவன் பாரதிதாசனின் இரண்டாம் ஆண்டு படிப்புக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது தொடர்பாக சமூக நீதித்துறை நேற்று முன்தினம் (செப்டம்பர் 17) மீண்டும் விளக்கம் அளித்திருந்தது.

கல்விக் கட்டணம்

இந்த சூழலில் இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந் திப்பில் பேசிய அமைச்சர் வன்னி அரசு, “வெளிநாட்டில் படிக்கும் மாணவர் பாரதிதாசன் விவகாரம் குறித்து துறை ரீதியாக நேற்று முழு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவரின் படிப்புக்கு தமிழ்நாடு அரசு முழு உதவி செய்யும். மூளை திசுக்கள் தொடர்பான பி.எச்.டி. ஆராய்ச்சியை தமிழ்நாட்டிலேயே அவர் மட்டுமே மேற்கொள்கிறார். அவர், படித்து முடித்து வர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

இந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணம் ரூ.6 லட்சம், வாழ்வாதார தொகை ரூ.6 லட்சம் அனுப்பப்பட்டு விட்டது. ஆராய்ச்சி பொருட்களுக்கான தொகை கேட்டுள்ளார். அதுவும் ஓரிரு நாட்களில் அவரை சென்றடையும். இதில் அரசியல் செய்ய வேண்டாம். கடந்த தி.மு.க. ஆட்சியில் அயோத்திதாசர் வெளிநாட்டுக்கல்வி உதவித் திட்டத்தில் 609 பேர் விண்ணப்பித்ததில் 601 பேர் தகுதி பெற்றும் 181 பேருக்கு மட்டுமே ரூ.84.89 கோடி வழங்கப்பட்டது. நாங்கள் இந்த ஆண்டு 437 விண்ணப்பங்களில் 365 பேருக்கு ரூ.131 கோடி ஒதுக்கியுள்ளோம். 15 ஆண்டுகளுக்குப் பிறகு யு.ஜி. மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.4,750-ல் இருந்து ரூ.12 ஆயிரமாகவும், பி.எச்.டி. மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரமாகவும் உயர்த்தியுள்ளோம்” என்று தெரிவித்திருந்தார்.

சமூக நீதித் துறை

இந்நிலையில் மலேசிய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பு பயின்று வரும் மாணவர் பாரதிதாசனுக்கு அயலக கல்வி உதவித்தொகையாக ரூ.23.95 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு கல்விக்காக ஏற்கனவே ரூ.12 லட்சம் விடுவிக்கப்பட்ட நிலையில் மேலும் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

தனக்கான கல்வி நிதி விடுவிக்கப்படவில்லை என மாணவர் பாரதிதாசன் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், தமிழக அரசின் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக சமூக நீதித் துறை தகவல் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT