சென்னை,
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அடுக்குமாடி குடியிருப்பு திட்டப்பகுதிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.261.85 கோடி நிதி ஒதுக்கீடு குறித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரால் 28.08.2026 அன்று சட்டமன்றத்தில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டப்பகுதிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை ரூ.355 கோடி திட்ட மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், குடிநீர் விநியோகம், கழிவுநீர் அகற்றம், மற்றும் இதர அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.261.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு நிர்வாக மற்றும் நிதி ஒப்புதல் வழங்கி அரசாணை எண். G.O.(4D) No.42, நாள் 06.11.2026-ன் மூலம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் தமிழ்நாடு முழுவதும் பராமரிக்கப்பட்டு வரும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில், குடிநீர் விநியோகம், கழிவுநீர் மேலாண்மை, சாலை மற்றும் மழைநீர் வடிகால் வசதிகள், மின்சார வசதிகள், தெருவிளக்குகள், பூங்காக்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இருப்பினும், சில குடியிருப்புகளில் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் அகற்றும் கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள், பழுதடைந்த ஆழ்துளைக் கிணறுகள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மூலம் ரூ.47.81 கோடி மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள குடியிருப்புத் திட்டப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் அகற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக 22 குடியிருப்புத் திட்டங்களில் உள்ள 28,375 குடியிருப்புகளுக்குக் குடிநீர் விநியோகக் கட்டமைப்பையும் மற்றும் தொடர்புடைய கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும், 42 குடியிருப்புத் திட்டங்களில் குறுகிய கால அடிப்படையில் கழிவுநீர் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும், 14 குடியிருப்புத் திட்டங்களில் நீண்டகால அடிப்படையில் கழிவுநீர் கட்டமைப்புகளையும் மேம்படுத்தப்பட உள்ளன.
செம்மஞ்சேரி குடியிருப்புப் பகுதியில் ரூ.70 கோடி மதிப்பீட்டில் குடிநீர் விநியோகக் கட்டமைப்பு மேம்பாடு செம்மஞ்சேரியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வரும் 870 தரை மற்றும் முதல் தளத்துடன் கூடிய குடியிருப்புக் கட்டடத் தொகுதிகளில் உள்ள 6,764 குடியிருப்புகளில் பொதுக் குடிநீர் குழாய்கள் (Public Fountains) மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால், குடியிருப்புவாசிகள் பொதுக் குடிநீர் குழாய்களிலிருந்து தண்ணீரை எடுத்துச் சென்று தங்களது குடியிருப்புகளுக்குப் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
இதற்குத் தீர்வு காணும் வகையில், ரூ.70 கோடி மதிப்பீட்டில் தற்போது பயன்பாட்டில் உள்ள பழுதடைந்த வார்ப்பிரும்புக் குடிநீர் குழாய்கள் அனைத்தையும் அகற்றி, புதிய குடிநீர் விநியோகக் குழாய்களை அமைத்து, செம்மஞ்சேரி குடியிருப்புப் பகுதிக்கான குடிநீர் விநியோகக் கட்டமைப்பை முழுமையாக மேம்படுத்த 35 மில்லியன் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி (35 MLD Overhead Tank), கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி (Underground Tank) மற்றும் புதிய குடிநீர் விநியோகக் குழாய்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும், ஒவ்வொரு குடியிருப்பிற்கும் தனித்தனியாக 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட HDPE குடிநீர்த் தொட்டிகளை குடியிருப்புக் கட்டடங்களின் மொட்டை மாடியில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணிகள் நிறைவேற்றப்படுவதன் மூலம் செம்மஞ்சேரி குடியிருப்புகளில் வசிக்கும் 6,764 குடும்பங்களுக்கும் சீரான மற்றும் பாதுகாப்பான குடிநீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.
சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் 98 குடியிருப்புத் திட்டங்களில் ரூ.144.04 கோடி மதிப்பீட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் 98 குடியிருப்புத் திட்டப் பகுதிகளில் உள்ள 74,306 குடியிருப்புகளில் ரூ.144.04 கோடி மதிப்பீட்டில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்துவதற்காக ஆழ்துளைக் கிணறுகள் (Bore Wells), தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகள் (Sumps), நீரேற்று அறைகள் (Pump Rooms) உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துதல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (STPs), DEWATS அமைப்புகள், செப்டிக் டேங்குகள், உறிஞ்சுக் குழிகள் (Soak Pits) மற்றும் கழிவுநீர் வடிகால் கட்டமைப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல், மின்சாரப் பகிர்மானப் பலகைகள் (Panel Boards), மின்சார உற்பத்தி ஜெனரேட்டர்கள் (Generators) மற்றும் மின்சார அறைகளில் (Electrical Rooms) தேவையான மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் முறையான திடக்கழிவு மேலாண்மை வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் திட்டங்களின் நீடித்த பராமரிப்பிற்குத் தேவையான இதர அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கை:
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம், முறையான கழிவுநீர் அகற்றம், தடையற்ற மின்சார வசதி மற்றும் சுகாதாரமான சுற்றுப்புறச் சூழலை உறுதி செய்வதுடன், குடியிருப்புகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள இந்நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.