தமிழக செய்திகள்

இதுவரை ரூ. 273.71 கோடி தேர்தல் பறக்கும் படையால் பறிமுதல்

வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நாளிலிருந்து நேற்று வரை, 'படிவம் 6'-ல் 6,48,285 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

சென்னை,

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் – 2026

1. 01.01.2026-ஐத் தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட சிறப்புத் தீவிர திருத்தத்தின் இறுதி வாக்காளர் பட்டியல், 23.02.2026 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 26.03.2026 வரை, 'படிவம் 6'-ல் 6,48,285 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. (சட்டமன்றத் தொகுதி வாரியான விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.) 26.03.2026 வரை பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான 06.04.2026 அன்றுள்ளவாறு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும்.

இப்பட்டியலில் தகுதிவாய்ந்த அனைத்து வாக்காளர்களும் சேர்க்கப்படுவர்.2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படவுள்ள வாக்காளர் பட்டியலானது, ஒரு 'ஒருங்கிணைந்த பட்டியலாக' (Integrated Roll) இருக்கும். இப்பட்டியலானது, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நாளிலிருந்து (23.02.2026) வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதித் தேதி வரையிலான காலத்தில் (26.03.2026 வரை பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் 06.04.2026 அன்று தயாரிக்கப்பட்டது) தொடர் திருத்தக் காலத்தின் போது மேற்கொள்ளப்பட்ட அனைத்துச் சேர்க்கைகளையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்ட சேர்க்கைகள், நீக்கங்கள் மற்றும் திருத்தங்கள் குறித்து தனித்தனியாக பட்டியல்கள் வெளியிடப்படுவதில்லை. மாறாக, அனைத்து வாக்காளர்களும் ஒரே வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவர், மேலும் அப்பட்டியலே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்படும்.

2. அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுக்கள் , 24x7 நேரமும் தீவிரமாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. 27.03.2026 அன்றைய நிலவரப்படி, இக்குழுக்களால் கைப்பற்றப்பட்ட பொருட்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

வ.எண்வகைதொகை (கோடிகளில்)
1ரொக்கம்44.89
2மதுபானம்0. 93
3போதைப்பொருட்கள்7.6
4விலைமதிப்பற்ற உலோகங்கள் (தங்கம்/வெள்ளி)116.07
5இதர பொருட்கள்/இலவசங்கள்104.2
மொத்தம்273.71

“தேர்தல் திருவிழா - தமிழ்நாட்டின் பெருவிழா”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.