கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

கள்ளக்குறிச்சியில் விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

உளுந்தூர்பேட்டை அருகே பைக் மீது ஆம்னி வேன், ஆட்டோ மோதிய விபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர்.

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே நடந்த வாகன விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (11.06.2026) மாலை 4.45 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், சிறுத்தனூர் கிராமம் அருகே ஐந்து மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றபோது விழுப்புரத்திலிருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி வந்த ஆம்னி வேன் மற்றும் ஆட்டோ மோதிய விபத்தில் ஜெஸ்டின் (வயது 16) த/பெ கிருஷ்ணராஜ், புருனோ (வயது 17) த/பெ லூர்துசாமி ஆகிய இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன்.

இவ்விபத்தில், படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆலன் (வயது 15) த/பெ லூர்துசாமி, சுஜீத் (வயது 16) த/பெ அய்யப்பன் மற்றும் அஜய் (வயது 16) தா/பெ ஜாக்லின் ஆகிய மூன்று மாணவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூன்று மாணவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT