சென்னை,
முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியை கவிழ்ப்பதற்கு சென்னையை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் தன்னிடம் ரூ.35 கோடி பேரம் பேசியதுடன், கொலை மிரட்டலும் விடுத்தார் என கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. இளையராஜா, கடந்த 29-ந்தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் திருவல்லிக்கேணி போலீசார், லஞ்ச ஊழல் தடுப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 3 பேர் கைது
இந்த வழக்கு தொடர்பாக, ஐ.பி.டி.எஸ். என்ற தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனத்தின் நிறுவனர் திருநாவுக்கரசு, மேலும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்களான சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த தியாகராஜன், பெசன்ட் நகரை சேர்ந்த நரேஷ் ஆகிய 3 பேர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் கரூரை சேர்ந்த தி.மு.க. பிரமுகர்களான ரமேஷ் மற்றும் கார்த்தி ஆகியோருக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்ததால், சென்னை போலீசார் கரூர் சென்று அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களின் வீடுகளில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினார்கள். அவர்கள் இருவரும் சென்னை அழைத்துவரப்பட்டனர். அவர்களிடம் சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரத்தை சேர்ந்த செல்வன் (வயது 54), சென்னை மானம்பாக்கத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சீனிவாசன் (46), அஸ்திநாபுரம் ஏரிக்கரை தெருவை சேர்ந்த ராஜேஷ் (43) ஆகிய 3 பேரை இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தேடி வந்தனர்.
இவர்களுக்கும், கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசோடு தொடர்பு இருந்ததாக தெரிகிறது. அவர்கள் 3 பேரும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருப்பது தெரியவந்ததால், அங்கு தனிப்படை போலீசார் விரைந்தனர். அங்கு வைத்து செல்வன், சீனிவாசன், ராஜேஷ் ஆகியோரை கைது செய்தனர்.
நேற்று காலை அவர்கள் 3 பேரும் பலத்த பாதுகாப்புடன் சென்னை அழைத்துவரப்பட்டனர். தீவிர விசாரணைக்கு பிறகு, இவர்கள் 3 பேர்களோடு, கரூரில் கைது செய்யப்பட்ட தி.மு.க. பிரமுகர்களான ரமேஷ் மற்றும் கார்த்தி ஆகியோரை சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர்.
கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு உள்ளிட்டோர், தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியும், அவருடைய தம்பி அசோக்குமாரும் கூறியதன்பேரில் இந்த பேரத்தை நடத்திய தாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்பேரில், செந்தில்பாலாஜியையும், அவரது தம்பி அசோக் குமாரையும் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். அவர்கள் இருவரையும் தீவரமாக போலீசார் தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே கரூர் வந்துள்ள போலீசார், கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அசோக்குமாரின் வீடு, கரூர் மாவட்டம் ராமேசுவரப்பட்டியில் உள்ள வீடு உள்ளிட்ட இடங்களில் அசோக்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.