தமிழக செய்திகள்

ரூ.400 கோடி லஞ்ச வழக்கு: முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் நீதிமன்றத்தில் சரண்

இந்த வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாரை முக்கிய குற்றவாளியாக போலீசார் தேடி வந்தனர்.

சென்னை,

தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரூ.400 கோடி ஊழல் வழக்கில், கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே தி.மு.க. பிரமுகர் அரசக்குமார் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் உள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் என்பவரை, போலீசார் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடி வந்தனர்.

இதற்கிடையில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் ஜாமின் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, ஷீல் நாகு அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட்டு முத்துக்கு மாரின் முன்ஜாமின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவரை கைது செய்ய போலீசார் அதிரடி நடிவடிக்கையில் இறங்கினர்.

இந்த நிலையில், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார், சென்னை ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சத்தியமூர்த்தி முன்பு இன்று சரணடைந்தார். இதனையடுத்து அவரை வருகிற 12-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து நீதிமன்ற அனுமதியுடன் முத்துக்குமாரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவ்வாறு அவரிடம் விசாரணை நடத்தினால் ஊழல் வழக்கில் திடுக்கிடும் ஆதாரங்கள் கிடைக்கும் என்று போலீசார் எதிர்பார்க்கிறார்கள்.

SCROLL FOR NEXT